புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகேயுள்ள ஏனப்பட்டி பேருந்து நிறுத்தத்தில் செப்டம்பர் மாதம் விடுதலைச் சிறுத்தை கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் விசிக கட்சிக் கொடியை ஏற்றி வைத்தார். ஆனால், கொடியேற்றிய இரண்டு நாளில் கொடி காணாமல் போனது. இந்நிலையில், விசிகவினர் இதுகுறித்து காவல்நிலையத்தில் புகாரளித்தனர். இதனைத் தொடர்ந்து மீண்டும் அதே கம்பத்தில் விசிகவினர் கட்சிக் கொடியேற்றினர்.
இதனிடையே நேற்று முன்தினம் இரவு சர்ச்சைகுரிய ஏனப்பட்டி விசிக கொடிக் கம்பத்தில் அடையாளம் தெரியாத நபர்கள் இரண்டு செருப்பைக் கட்டி தொங்கவிட்டு சென்றுள்ளனர். இது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், கட்சி நிர்வாகிகள் நமண சமுத்திரம் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். இந்தப் புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்தச் சூழலில், விசிக கட்சிக் கொடி கம்பம், திருச்சி - காரைக்குடி நெடுஞ்சாலையோரம் இருப்பதால் இதனை செய்தது யார் என்பதை கண்டறிவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், ஆத்திரமடைந்த விசிகவினர் ஒன்றாக இணைந்து 50க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது காவல்துறையினருக்கும் விசிகவினருக்குமிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து தடையை மீறி சாலை மறியலில் ஈடுபட்ட விசிகவினரை காவல்துறையினர் கைது செய்தனர்.
இதுகுறித்து விசிகவினர் கூறுகையில், இது எங்கள் கட்சிக்கு பெரும் அவமானத்தை ஏற்படுத்தியுள்ளது. புகார் கொடுத்தும் இதுவரை காவல்துறை நடவடிக்கை எடுப்பதாக தெரியவில்லை. உடனடியாக இந்த அவமதிப்பு செயலை செய்தவர்களை காவல்துறை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.