புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக்கழகத்தின் தலைவர் கரு. ராஜேந்திரன் தலைமையில், நிறுவனர் மங்கனூர் ஆ. மணிகண்டன், பொருளாளர் எம். ராஜாங்கம், துணைத் தலைவர் கஸ்தூரி ரெங்கன், இணைச்செயலாளர் மு. முத்துகுமார், உறுப்பினர் ரகமத்துல்லா ஆகியோர் கொண்ட குழு விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணறுக்கு நேரில் சென்று பொற்பனைக்கோட்டையில் விரிவான அகழாய்வை தமிழ்நாடு தொல்லியல் துறை, மேற்கொள்ள தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசிடம் நேரில் சென்று கோரிக்கைவிடுத்துள்ளனர்.
அந்தக் கோரிக்கை மனுவில், ”புதுக்கோட்டை மாவட்டம் சங்க கால சான்றுகள் நிறைந்த கோட்டையாகும். இங்கு, 2019ஆம் ஆண்டு தமிழ்நாடு தொல்லியல் துறை அகழாய்வு நடத்த வலியுறுத்தி வழக்கறிஞர் கணபதி சுப்பிரமணியம் மூலமாக கரு. ராஜேந்திரன் வழக்குத் தொடர்ந்திருந்த நிலையில், அகழாய்வு செய்ய சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக்கிளை உத்தரவிட்டிருந்தது.
ஆபரணங்களின் மணிகள் கண்டுபிடிப்பு
இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு தொல்லியல் துறை பரிந்துரையின்படி, தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் ஒரு லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் அகழாய்வை 2021ஆம் ஆண்டு ஜூலை 30 அன்று சுற்றுச்சூழல் அமைச்சர் வீ. மெய்யநாதன் தொடங்கிவைத்தார்.
அகழாய்வுப்பணி செப்டம்பர் 30 அன்று நிறைவடைந்தது. இந்த அகழாய்வு சிறிய அளவில் ஒரு அகழாய்வுக்குழி அமைத்து மேற்கொள்ளப்பட்டது. இதில் செங்கல் கழிவு நீர் கட்டுமானத்தின் புறப்பகுதி மட்டும் கிடைத்துள்ளது. இந்நிலையில் அரண்மனை மேடு, கோட்டை மதில் சுவரிலும் பழங்கால கூரை ஓடுகள், ஆம்போரா குடுவையை ஒத்த அடிப்பாகம், இரும்புப் பொருள்கள், மணிகள், குவார்சைட் ஆபரணங்களின் மணிகள் கிடைத்துள்ளன.
தமிழனின் தொன்மை நாகரிகம்
மேலும் விரிவான முறையில் தமிழ்நாடு தொல்லியல் துறை மூலம் அறிவியல் தொழில்நுட்ப உபகரணங்களின் மூலம் தொடராய்வு மேற்கொள்வதன் மூலம், தமிழரின் வாழ்வியல் நிலையில் கோட்டையின் பங்கை நிறுவுவதற்கான நிகழ்காலச் சான்றாக அமையும். இதன் மூலம் தமிழனுடைய தொன்மையும், நாகரிகமும் வெளி உலகுக்குத் தெரியவரும்.
இலக்கிய, சமூகவியல் சான்றுகளுக்கு வலுசேர்க்கும் என்பதால் தமிழ்நாடு தொல்லியல் துறையே இவ்வகழாய்வுப் பணியைச் செய்வதே முழுமையானதாகவும், சிறப்பானதாகவும் இருக்கும்” எனக் கோரிக்கைவிடுத்தனர். இக்கோரிக்கை குறித்து பரிசீலிப்பதாகத் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு குழுவினரிடம் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : பழைய சாலைகளை அகழ்ந்தெடுத்த பிறகு புதிய சாலை அமைக்க உத்தரவு