புதுக்கோட்டை சட்டப்பேரவை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் முத்து ராஜாவை ஆதரித்தது திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது பேசிய அவர், "தமிழ்நாட்டில் ஆட்சிமாற்றம் நடப்பது உறுதி. எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் குறித்து நான் பரப்புரைக் கூட்டத்தில் பேசியதற்கு பாஜக நிர்வாகி கொடுத்த புகாரின்பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு அமைச்சருக்கும் ஒவ்வொரு பட்டப்பெயர் உள்ளது.
கரோனா தொற்று மூலம் காசு பார்த்த அமைச்சர், தற்போது தேர்தலுக்காக கண்ணீர் வடித்து பரப்பரை செய்கிறார். சிஏஏ, என்ஆர்சி சட்டங்களுக்கு ஏற்கனவே நாடாளுமன்றத்தில் ஆதரவு தெரிவித்த அதிமுக, தற்போது அதை எதிர்ப்பதாக தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளது.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா எப்படி இறந்தார் என்பது குறித்து விசாரணை செய்து உண்மையைக் கண்டுபிடிக்கும் பட்சத்தில் முதலாவதாக சிறைக்கு செல்பவர் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்தான்" என்று தெரிவித்தார்.
மேலும், மத்திய அரசு ஐநூறு, ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்ததால் ஏழை, எளிய மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர் என்று கூறி, தடை செய்யப்பட்ட 1000 ரூபாய் நோட்டை எடுத்து இதை நான் பத்திரமாக வைத்துள்ளேன் என்று உதயநிதி காண்பித்தார். இது தற்போது மீண்டும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.