புதுக்கோட்டை: இணையதளங்களின் உதவியுடன் சட்டவிரோதமாக துப்பாக்கி தயாரித்த இருவரை காவல்துறையினர் கைது செய்தனர். இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தொடர் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம், உடையன்னேரி காலனியில் அமுதா என்பவரது வீட்டில் வசிப்பவர்கள் சட்ட விரோத செயலில் ஈடுபடுவதாக காவல்துறையினருக்குத் தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து, சம்பந்தப்பட்ட வீட்டில் காவல்துறையினர் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது வீட்டினுள் இருந்தவர் இளைஞர்கள் நாட்டு துப்பாக்கி, துப்பாக்கி தயாரிக்க பயன்படுத்தும் உபகரணங்களை வைத்திருந்தது தெரியவந்தது.
![two held with Illegal guns](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-pdk-04-making-gun-2-persons-arrest-img-7204435_03102020215903_0310f_1601742543_635.jpg)
அவர்களை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர். விசாரணையில், பிடிபட்டவர்கள் சிவா (எ) சிவகுமார் (19), மாரி (எ) மாரிமுத்து(21) என்பதும், இவர்கள் யூ-டியூப், கூகுள் தேடுதளம் (Search Engine) ஆகியவற்றின் மூலம் துப்பாக்கி தயாரித்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, கணேஷ் நகர் காவல்துறையினர் இருவரையும் கைது செய்ததோடு, அவர்களிடம் இருந்து ஒரு நாட்டு துப்பாக்கி, துப்பாக்கி தயாரிக்கப் பயன்படுத்தப்படும் உபகரணங்களையும் பறிமுதல் செய்தனர்.
![two held with Illegal guns](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-pdk-04-making-gun-2-persons-arrest-img-7204435_03102020215903_0310f_1601742543_691.jpg)
விசாரணைக்குப் பின்னர் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய காவல்துறையினர் சிறையில் அடைத்தனர். இணையதளங்களின் உதவியுடன் இருவர் துப்பாக்கி தயாரித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தொடர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.