புதுக்கோட்டை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற திருவப்பூர் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் தேர் திருவிழா இன்று (பிப். 26) பூச்சொரிதலுடன் தொடங்கியது. இந்த பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு பாரம்பரிய ஜல்லிக்கட்டு போட்டி திருவப்பூர் அருகே உள்ள கவிநாடு கண்மாயில் நடைபெற்றது. இந்நிலையில் வாடிவாசலிருந்து அவிழ்த்து விடப்பட்ட காளைகள் நாலாபுறமும் சிதறி ஓடியன. இதில் ஜல்லிக்கட்டு திடலின் ஒரு பகுதியில் உள்ள கண்மாய் நீருக்குள் பத்துக்கு மேற்பட்ட காளைகள் ஓடின.
இதையடுத்து ஜல்லிக்கட்டு காளையைத் தேடி காளையின் உரிமையாளர்கள் இருவர் கண்மாய்க்குள் இறங்கினர். இந்நிலையில் கண்மாய்க்குள் இறங்கிய காளை ஒன்று கழுத்தில் கட்டி இருந்த கயிறு மறுமுனை கண்மாயில் உள்ள கருவேல மரத்தில் சிக்கி சகதிக்குள் புதைந்தது. இதையடுத்து சகதிக்குள் மூழ்கிய காளையை மீட்க காளையின் உரிமையாளர்கள் சென்ற நிலையில் காளை வெளியே வர முடியாமல் உயிரிழந்தது.
இதையடுத்து தீயணைப்பு துறையினர் மோட்டார் படகின் மூலம் சென்று உயிரிழந்த காளையை மீட்டு வந்தனர். மேலும் மற்றொரு காளை மாடும் கண்மாயில் உள்ள சகதிக்குள் சிக்கி உடலில் காயம் ஏற்பட்ட நிலையில் உயிரிழந்தது. காலையிலிருந்து சிறப்பாக நடைபெற்று வந்த ஜல்லிக்கட்டு போட்டியில் இரண்டு காளை மாடுகள் இறந்தது பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: குடிபோதையில் வாகனம் ஓட்டிய வழக்குகளில் ரூ.4 கோடிக்கும் மேல் அபராதம் வசூல்