புதுகோட்டை: முறைகேட்டில் ஈடுபட்ட அலுவலர்களை பணியிடை நீக்கம் செய்தது தொடர்பாக கூட்டுறவுத் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பது,
“புதுக்கோட்டை மண்டலம், கீரனூர் தொடக்க கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியில் நகைக் கடன் முறைகேடு தொடர்பான, கூட்டுறவுச் சங்கங்களின் மாநில பதிவாளர் 31.03.2021 அன்று நிலுவையிலுள்ள நகைக் கடன்களை 100 % சரிபார்க்க அறிவுறுத்தினார்.
புதுக்கோட்டை மணடலத்தில் செயல்படடு வரும், கீரனூர் தொடக்க கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியில் தஞ்சாவூர் மண்டல ஆய்வுக் குழுவின் மூலம் 100 % நகைக் கடன் குறித்து 07.12.2021 அன்று ஆய்வு செய்தபோது, நகைகள் இல்லாமல் கொடுத்த கடன்களின் வகைகளில் நகைப் பொட்டலங்கள் குறைவாக இருப்பது கண்டறியப்பட்டது.
முறைகேடு தொடர்பான விசாரணை
மண்டல இணைப்பதிவாளரால் துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, மேற்படி வங்கியின நகை பெட்டக சாவிகள் மேலாண்மை இயக்குநரால் கைப்பற்றப்பட்டது. ஆய்வு அலுவலரால் சமர்பிக்கப்பட்ட பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள 102 நகைக் கடன்களும், வங்கியில் பணியாற்றும் பணியாளர்களின் உறவினர்களின் பெயரில் வழங்கப்பட்டவைகளா எனவும் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்களின் உறவினர்கள் பெயரிலும், வழங்கப்பட்டுள்ளதா எனவும் விசாரிக்கப்பட்டு வருகிறது.
தற்காலிகப் பணியிடை நீக்கம்
முறைகேடுகள் தொடர்பாக வங்கிச் செயலாளர் பி.நீலகண்டன், மேற்பார்வையாளர் என்.சக்திவேல் ஆகிய இருவரும் தற்காலிகப்பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். வங்கியின் நகை மதிப்பீட்டாளர் என்.கனகவேலு வங்கியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
அடுத்தகட்ட நடவடிக்கை
இவர்கள் இம்முறைகேட்டினை குற்றமுறு நோக்குடன் மேற்கொண்டுள்ளதால் குற்றவியல் நடவடிக்கையும் எடுக்கப்படவுள்ளது. மேலும் இம்முறைகேடுகள் தொடர்பாக விசாரணைக்கு ஆணையிடப்படவுள்ளது.
ஆய்வுக் குழுவின் முதன்மை அறிக்கையின்படி முறைகேடு செய்யப்பட்ட நகைக் கடன் தொகை ரூ 1,08,17,500, வங்கியின் செயலாளர், மேற்பார்வையாளர் மற்றும் நகை மதிப்பீட்டாளர் ஆகியோரிடமிருந்து கைப்பற்றுவதுடன் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ரூ.50 லட்சம் மோசடி செய்த இணை அமைச்சரின் உதவியாளருக்கு பிணை ரத்து