புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை பகுதியைச் சேர்ந்த 26 வயது மதிக்கத்தக்க பெண்மணி, நேற்று (நவ.25) பல் துலக்கும்போது, தவறுதலாக குளியல் அறையில் வழுக்கி விழுந்துள்ளார். அப்போது பல் துலக்கிக் கொண்டு இருந்த டூத் பிரஷ் அவரது, வாயின் தசைப் பகுதியில் குத்தி சிக்கி உள்ளது.
அதை எவ்வளவு முயன்றும் எடுக்க முடியாததால், உடனடியாக அந்த பெண்மணியை அவரது உறவினர்கள் கந்தர்வகோட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளனர். இதனைப் பார்த்த அங்கு பணியில் இருந்த காது, மூக்கு தொண்டை மருத்துவர் அனுஷா தலைமையிலான மருத்துவக் குழுவினர், அந்த பெண்மணிக்கு சம்பந்தப்பட்ட தசைப் பகுதியில் மயக்க ஊசி செலுத்தி, தசைப் பகுதியில் குத்தி இருந்த டூத் பிரஷ்ஷை அகற்றியதோடு, கிழிந்த தசைப் பகுதியை தையலிட்டு ஒன்று சேர்த்துள்ளனர்.சம்பந்தப்பட்ட பெண்ணிற்கு உரிய நேரத்தில் கந்தர்வகோட்டை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சிகிச்சை அளித்ததால், வேறு விதமான பாதிப்புகள் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது.
இதனையடுத்து உரிய நேரத்தில் காது, மூக்கு, தொண்டை மருத்துவர் அனுஷா, அந்த பெண்மணிக்கு தேவையான சிகிச்சையை கந்தர்வகோட்டை அரசு மருத்துவமனையிலேயே அளித்தது, அந்த பகுதி மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இதையும் படிங்க: ராஜஸ்தான் சட்டமன்றத் தேர்தல்; 74.13 சதவீத வாக்குகள் பதிவானது!