புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி வட்டம் கீரமங்கலத்தில் சுமார் 820 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவன் கோயில் உள்ளது.
அக்கோயில் தளத்தில் நக்கீரர் வந்து வழிபட்ட வரலாற்றுப்பதிவுகளும் உண்டு. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அக்கோயிலின் எதிர்புறம் 200 அடி நீளமும், 150 அடி அகலமும் கொண்ட நீர்த்தடாகத்தின் நடுவே 81 அடி சிவன் சிலை வடிவமைக்கப்பட்டு குடமுழுக்கு விழாவும் கோயிலில் நடைபெற்றது. இதில்1.50 லட்சம் பேருக்கு மேல் கலந்துகொண்டனர். இங்குள்ள 81அடி சிவன்சிலை தென்னிந்தியாவிலேயே மிகப்பெரிய சிவன் சிலை எனக் கருதப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் மகாசிவராத்திரி விழா வெகு சிறப்பாக நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் இந்த வருடமும் திங்கள் அன்று மகாசிவராத்திரி விழாவானது ஊர்ப்பொதுமக்கள் சார்பில் வெகு சிறப்பாக நடைபெற்றது. சோமவார நாள் என்று சொல்லப்படக்கூடிய திங்கட்கிழமை வரும் மகாசிவராத்திரி மிகவும் விசேஷத்திற்குரியதாக கருதப்படுகிறது. அதனை முன்னிட்டு நான்கு கால பூசைகளும் சிறப்புற நடைபெற்றது.
இதில் முன்னதாக திருச்சி பாரதி கலைக்குழுவின் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் ஆன்மீக சொற்பொழிவும், பட்டிமன்றமும் நடைபெற்றது.
வட இந்தியாவில் மட்டுமே காணக்கிடைக்கக்கூடிய மிகப்பெரும் சிவாலயங்கள் தென்னிந்தியாவின் ஒரு கிராமப்புறத்தில் அமையப்பெற்றுள்ளது என்பதால் பல்லாயிரக் கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். ஆன்மீக நண்பர்களுக்கு ஓர் வரப்பிரசாதமாகும்.