புதுக்கோட்டை: பெரியார் நகரில் தரையிலிருந்து மூன்று மாடிக் கட்டடம் ஒன்றை நான்கு அடி உயரத்திற்கு உயர்த்தி பணியை செய்துவருகிறது மதுரையை சேர்ந்த ஸ்ரீ மீனாட்சி அசோசியேஷன் என்ற தனியார் நிறுவனம்.
இதுகுறித்து தனியார் நிறுவனத்தின் தலைவரான கட்டடப் பொறியாளர் அன்பில் தர்மலிங்கம் கூறியபோது, "இதுவரை கட்டிய 15 கட்டடங்களும் எந்தவித பிரச்சினையும் இன்றி நன்றாக அமைந்தது. தற்போது பதினாறாவது கட்டடமாக பெரியார் நகரில் கட்டப்பட்டுவரும் மூன்று மாடிக் கட்டடத்தை ’லிஃப்டிங் அண்ட் ஷிஃப்டிங்’ என்ற முறையில் 415 டன் எடை கொண்ட 2,480 சதுர அடி அளவிலான கட்டடம் கடந்த 30 நாள்களாக பணியாற்றி நான்கு அடி உயரத்திற்கு தற்போது உயர்த்தப்பட்டுள்ளது.
இதில் 250 ஜாக்கிகள், 12 தொழிலாளர்கள், நான்கு டன் மெட்டீரியல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. மாவட்டத்தில் முதன்முறையாக இந்தப் பணி நடைபெற்றிருப்பது அனைவரையும் ஆச்சரியம் கலந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
இதற்காக ஆறு லட்சம் ரூபாய் செலவாகும். இந்தக் கட்டடத்தை இடித்துவிட்டு புதிதாக கட்டினால் 60 லட்ச ரூபாய் வரை செலவாகும். தற்போது உயர்த்தப்பட்டுள்ள கட்டடம் வலுவான நிலையில் இருப்பதால், சுமார் 30 ஆண்டுகளுக்கு எந்தவித பிரச்சினையும் இல்லை" என்றார்.