இன்று திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு புதுக்கோட்டை நகர பகுதியான சின்னப்பா பூங்காவில் உள்ள திருவள்ளுவர் சிலை முன்பு பெண்கள் சமத்துவ பொங்கல் வைத்தனர்.
அதன் பின்னர் திருவள்ளுவர் சிலைக்கு வர்த்தக சங்க நிர்வாகிகள் சீனு சின்னப்பா சாகுல் ஹமீது மற்றும் பொதுமக்கள் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
பின்னர் மாணவர்களின் திருக்குறள் ஒப்புவித்தல், சிலம்பம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்த நிகழ்வில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
அதேபோல், தேனி அருகே உள்ள வீரபாண்டியில் வள்ளுவர் சமுதாய மக்கள் திருவள்ளுவர் சிலைக்கு பாலாபிஷேகம் செய்து வழிபட்டனர். சித்த மருத்துவம், ஜோதிடம் ஆகியவற்றை பிரதான தொழிலாக செய்து வரும் வள்ளுவர் சமுதாய மக்கள் திருவள்ளுவரை தங்களது முன்னோராகவும், தெய்வமாகவும் வணங்கி வருகின்றனர்.
இந்நிலையில் திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு மாலை அணிந்து ஏழு நாள்கள் விரதம் இருந்து இன்று வீரபாண்டி கண்ணீஸ்வரமுடையார் திருக்கோயிலிலிருந்து பால்குடம் சுமந்து வந்தனர். பின்னர் அச்சமுதாயத்தினருக்கு சொந்தமான மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவரின் திருவுருவச்சிலைக்கு அவர்கள் பாலாபிஷேகம் செய்து வழிபட்டனர்.