புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள தீயத்தூர் கிராமத்தில் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதில் திருச்சி மக்களவை உறுப்பினர் திருநாவுக்கரசர் விழாவில் பங்கேற்றார். அப்போது செய்தியாளர்களிடம் கூறியதாவது.
"தமிழ்நாட்டில் நடைபெறும் மருத்துவர்கள் போராட்டம் கண்டிக்கத்தக்கது. ஏனெனில் ஒருவருக்கு உடல்நிலை சரியில்லை என்றால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். மக்கள் சேவைக்கு மருத்துவர்கள் பெரும் பங்கு வகிக்கின்றனர். அதனால் அவர்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்து அதற்கேற்றாற்போல அரசாங்கம் அவர்களுக்கு தேவையானதைச் செய்து இந்தப் பிரச்னையை தீர்த்து வைக்க வேண்டும் என்பது என்னுடைய கருத்து" என்று கூறினார்.
மேலும், "திருச்சி நடுக்காட்டில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தை இறப்பு மிகவும் வேதனையளிக்கிறது. குழந்தையைக் காப்பாற்ற அரசு எடுத்த நடவடிக்கைகள் ஐந்து நாட்கள் வரை தொடர்ந்தது ஏன் எனத் தெரியவில்லை. வெளிநாடுகளிடம் உதவி கேட்டு அங்கிருந்து இயந்திரங்களைக்கூட வரவழைத்து இருக்கலாம். மேலும் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க ஆழ்துளைக் கிணறுகளை உடனடியாக அடைப்பதற்கான நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும்" என்று திருநாவுக்கரசர் தெரிவித்தார்.
இதையும் படிக்க: ‘ஆழ்துளைக் கிணறுகளை மூட அரசு உத்தரவிட வேண்டும்’ - கே.எஸ். அழகிரி