புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திரசேகர். இவர் தனது வீட்டில் ஆடுகளை வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் வீட்டில் கட்டி வைத்திருந்த இரண்டு ஆடுகள் காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவரும் அவரது நண்பர்களும் கீரமங்கலத்தில் உள்ள அனைத்து கறிக் கடைகளிலும் தனது ஆடு இருக்கிறதா எனத் தேடியுள்ளனர்.
அப்போது திருடுபோன தனது ஆட்டின் தலையையும், காலையும் ஒரு கடையில் பார்த்துள்ளார். உடனே கறிக் கடைகாரரிடம் சண்டையிட்டு அந்த தலையையும் காலையும் வாங்கிக் கொண்டு நேராக கீரமங்கலம் காவல் நிலையத்திற்குச் சென்றார்.
அங்கு, காணாமல் போன என்னுடைய ஆடுகள் கறிக் கடைக்கு விற்கப்பட்டு கறிக்காக அறுக்கப்பட்டுள்ளது. இது ஆட்டின் தலை. தற்போது என்னுடைய ஆடு திருடு போயிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. உடனடியாக ஆட்டைத் திருடியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சந்திரசேகர் முறையிட்டுள்ளார்.
சந்திரசேகரின் புகாரை ஏற்று கறிக்கடை வியாபாரிகளிடம் விசாரணை நடத்திய போது சிலர் இந்த ஆட்டை வந்து விற்றதும், தொடர்ந்து அவர்களிடமிருந்தே ஆடுகளை வாங்கி வியாபாரம் செய்துவந்ததாகவும் கூறியுள்ளனர்.
இதனால் கீரமங்கலம் காவல் துறையினர் அங்குள்ள அனைத்து கடைகளிலும் திருடப்பட்ட ஆடுகளை வெட்டி விற்பனை செய்து வருகின்றனவா என விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
கடந்த சில மாதங்களாகவே வடகாடு கீரமங்கலம், மாங்காடு, கொத்தமங்கலம் ஆகிய பகுதிகளில் அதிகமாக ஆடுகள் திருடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கோயம்பேடு இறைச்சி கடை ஆடுகள் திருட்டு, போலீஸ் விசாரணை