புதுக்கோட்டை: பேராவூரணி பணஞ்சேரி கிராமத்தை சேர்ந்த சுகுமாரன் மகள் தீபிகா (22). இவர் பட்டதாரி ஆவார். வளப்பிரமன்காடு மாசிலாமணி மகன் விவேக்(27). இவர் ஐடிஐ முடித்துள்ளார். இந்நிலையில் தீபிகா மற்றும் விவேக் ஆகிய இருவரும் கடந்த 6 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் பெண்வீட்டார் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த 23ஆம் தேதி தீபிகா வீட்டை விட்டு வெளியேறி அவரது காதலன் விவேக்குடன் சென்று பட்டுக்கோட்டையில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியுள்ளார். பின்னர் 24ஆம் தேதி பட்டுக்கோட்டையில் உள்ள பிள்ளையார் கோயிலில் இருவரும் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர்.
இதனையடுத்து தாங்கள் திருமணம் செய்து கொண்டது குடும்பத்திற்கு தெரிந்தால் பிரச்சனை ஏற்படும் என்று எண்ணிய இருவரும் ஆலங்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.
பின்னர் ஆலங்குடி அனைத்து மகளிர் காவல்துறையினர், தீபிகா கொடுத்த புகாரையடுத்து இரு குடும்பத்தாருக்கும் தகவல் தெரிவித்தனர். பின்னர் இரு தரப்பு பெற்றோர்களும் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இந்நிலையில் பெண் வீட்டார் பேச்சுவார்த்தைக்கு உடன்படாததால் காவல் நிலையத்தில் பரபரப்பான சூழல் நிலவியது. பின்னர் தீபிகா தனது காதல் கணவருடன் செல்வேன் என்று உறுதியாக கூறியதையடுத்து, தீபிகாவை அவரது காதல் கணவர் விவேக்குடன் அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க: மாநகராட்சி கூட்டத்தில் பெண்கள் உள்ளாடை உதாரண பேச்சு.. சர்ச்சையில் சிக்கிய திமுக கவுன்சிலர்!