புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அடுத்த மேற்பனைக்காடு பகுதியில் கோடை தாகத்தைத் தணிக்க அந்தப் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சேர்ந்த தண்ணீர் பந்தல் ஒன்றை அமைத்து மோர், தண்ணீர் உள்ளிட்ட பானங்களை வழங்கினர். இந்நிலையில் கடந்த சில தினங்களாக இரவு நேரங்களில் தண்ணீர் பந்தலில் இருந்த டம்ளர்கள் தொடர்ந்து காணாமல் போயுள்ளன.
இதையறிந்த இளைஞர்கள் இந்தச் செயலில் யார் ஈடுபடுகிறார்கள் என்பதை கண்டறிந்து ஆதாரத்துடன் காவல்நிலையத்தில் புகார் அளிக்க முடிவு செய்தனர். அதற்காக தண்ணீர் பந்தலின் அருகே சிசிடிவி கேமரா ஒன்றை பொருத்தியுள்ளனர்.
இந்நிலையில் இன்று காலையில் வழக்கம் போல் மீண்டும் தண்ணீர் பந்தலில் இருந்த டம்ளர் காணாமல் போயுள்ளது. அப்போது அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது இளைஞர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஏனென்றால், காவல் துறையினரே டம்ளர் திருட்டில் ஈடுபடும் காட்சி பதிவாகியிருந்தது.
இது குறித்து இளைஞர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரை ஏற்று விசாரித்தபோது இரவு நேரத்தில் ரோந்துப் பணிக்கு வரும் கீரமங்கலம் காவலரான ஐயப்பன், ஊர் காவல்படை காவலர் வடிவழகன் ஆகியோர் மது அருந்துவதற்காக டம்ளர்களை திருடிச் சென்றது தெரியவந்தது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.