புதுக்கோட்டை மாவட்டம் கோமாபுரத்தைச் சேர்ந்த விவசாயி ராஜீவ்காந்தி. இவர் தென் இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் மாவட்டத் தலைவராகவும் உள்ளார். இவர் கோமாபுரத்திலுள்ள தனது நிலத்தை உள்பிரிவு செய்வதற்காக அப்பகுதி கிராம நிர்வாக அலுவலர் ஜெரோமை அணுகியபோது, அவர் நிலத்தை உள்பிரிவு செய்வதற்காக ஒரு பட்டா எண்ணிற்கு தலா ஐந்தாயிரம் என ஏழு பட்டாவிற்கு 35 ஆயிரம் ரூபாய் கையூட்டாக கேட்டதாகக் கூறப்படுகிறது.
கையூட்டு கொடுக்க விரும்பாத ராஜீவ்காந்தி இது தொடர்பாக புதுக்கோட்டை லஞ்ச ஒழிப்புத் துறை காவல் துறையினரிடம் புகார் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து லஞ்ச ஒழிப்புத் துறையினர் நேற்று (டிச. 02) அவரிடம் ரசாயனம் தடவிய 15 ஆயிரம் ரூபாய் நோட்டுகளைக் கொடுத்து அதனை கிராம நிர்வாக அலுவலர் ஜெரோமிடம் கொடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர்.
அதன்படி, கந்தர்வகோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் வைத்து ஜெரோமிடம், ராஜீவ்காந்தி 15 ஆயிரம் ரூபாயைக் கொடுத்துள்ளார்.
அந்தப் பணத்தை அங்கிருந்த நில அளவையர் முத்து, துணை வட்டாட்சியர் செல்வகணபதி உள்ளிட்டோர் பங்கீடு செய்யவிருந்த நிலையில் மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறை துணைக் கண்காணிப்பாளர் மணிகண்டன் தலைமையிலான காவல் துறையினர் மூவரையும் கையும் களவுமாகப் பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
மூவரிடமும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் நான்கு மணி நேரத்திற்கும் மேலாக மேற்கொண்ட விசாரணையில் அவர்கள் ராஜீவ்காந்தியிடம் நிலம் உள்பிரிவு செய்வதற்காக கையூட்டு வாங்கியதை ஒப்புக் கொண்டதாகக் கூறப்படுகிறது.
இதனையடுத்து அவர்கள் மூவரையும் கைதுசெய்து, அவர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைக்கும் பணியை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: ரயில் படிக்கட்டில் காற்று வாங்கச் சென்ற இளம்பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!