புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசலில் கடந்த சில நாள்களுக்கு முன்பு அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் திருச்சி அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார். அவரது உடல் உறவினர்களிடம் வழங்கப்பட்டு சமுதாய முறைப்படி அடக்கம் செய்தனர்.
இதையடுத்து மறுநாள் காலை இறந்தவருக்கு கரோனா தொற்று இருந்ததாகவும், அதனால்தான் அவர் இறந்தார் என்று சுகாதாரத் துறையினர் மூலம் உறவினர்களுக்குத் தெரியவந்தது.
இதனைத்தொடர்ந்து உடனே இறந்தவரின் குடும்பத்தினர் அனைவருக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பரிசோதனை முடிவில் இறந்தவர் குடும்பத்தில் சிறுவர்கள் உள்பட 10 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காகப் புதுக்கோட்டை ராணியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால் அப்பகுதி முழுவதும் தடுப்புகள் அமைக்கப்பட்டு, கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. ஒரே வீட்டில் 10 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டது அப்பகுதி மக்களிடம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.