புதுக்கோட்டை இலுப்பூர் அருகே உள்ள முத்துமாரியம்மன் கோயிலில் வைகாசி திருவிழா கடந்த ஒரு வாரமாக நடந்துவருகிறது. இக்கோயிலில் திருவிழாவின்போது அறிவிப்பு செய்வதற்காக கோயிலில் ஒலி பெருக்கி வைக்கப்பட்டிருந்தது. இன்று மதியம் அவ்வழியாக சென்ற கரூர் மாவட்டத்தில் பணிபுரியும் காவல் உதவி ஆய்வாளர் முத்து, கோயிலில் இருந்த இளைஞர்களிடம் தகராறு செய்து அங்கிருந்த மைக்குகளை பறித்துச் சென்று இலுப்பூர் காவல் நிலையத்தில் கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதில் ஆத்திரமடைந்த நவம்பட்டி பொதுமக்கள் 200-க்கும் மேற்பட்டோர், புதுக்கோட்டை விராலிமலை சாலையில் அமர்ந்து திடீர் மறியலில் ஈடுபட்டனர்.
பின்னர், இச்சம்பவத்தில் ஈடுபட்ட முத்துவை வரவழைத்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும், எடுத்து சென்ற மைக்குகளை திருப்பி ஒப்படைக்க வேண்டும் என்றும் கோஷமிட்டனர். இதனால் இங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இலுப்பூர் டிஎஸ்பி சிகாமணி, இலுப்பூர் இன்ஸ்பெக்டர் ஜெயராமன், இலுப்பூர் முன்னாள் பேரூராட்சித் தலைவர் குரு ராஜமன்னார் ஆகியோர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து மறியல் கைவிடப்பட்டது. இந்த மறியலால் சுமார் இரண்டு மணி நேரம் புதுக்கோட்டை விராலிமலை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.