புதுக்கோட்டை: நடிகர் தனுஷ் நடித்து வெளியாக இருக்கும் வாத்தி திரைப்படத்திற்கு ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது குறித்து தமிழ்நாடு உயர்நிலைப்பள்ளி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்க முன்னாள் மாநில பொதுச் செயலாளர் சாமி. சத்தியமூர்த்தி புதுக்கோட்டையில் நமது ஈடிவி பாரத் செய்திக்கு பேட்டியளித்தார்.
அப்போது அவர் கூறுகையில், “நடிகர் தனுஷ் நடித்து நாளை (டிச.17) திரைக்கு வரவுள்ள திரைப்படத்திற்கு ‘வாத்தி’ என பெயர் வைத்திருப்பது பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. சமூகத்தில் இன்னமும் பல்வேறு பகுதிகளில் ஆசிரியர்களை வாத்தி என அழைக்கிறார்கள்.
தற்போது மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இடையே நல்லுறவு குறைந்து வருகிறது. இந்நிலையில் இந்த படம் அதே தலைப்புடன் வெளி வந்தால் மாணவர்கள் ஆசிரியர்களை அவமதிக்கும் சூழ்நிலை ஏற்படும். ஆசிரியர் சமூகத்திற்கு இழிவு ஏற்படும். எனவே இதனைக் கருத்தில் கொண்டு நடிகர் தனுஷ், இயக்குநர், தணிக்கை துறையும் விரைந்து திரைப்படத்தின் பெயரை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.
மேலும், ''இது சம்பந்தமாக மேல் நடவடிக்கை குறித்து பல்வேறு ஆசிரியர் சங்கங்கள், ஓய்வு பெற்ற ஆசிரியர் சங்கங்கள் ஆகியவை ஒருங்கிணைத்து ஆலோசனை செய்து வருகிறோம். மேல் நடவடிக்கை விரைவில் எடுக்கப்படும்'' என்றார்.
இதையும் படிங்க: "அயலியை அம்மாவுடன் அமர்ந்து பாருங்கள்" - இயக்குநர் முத்துக்குமார்!