உடல் உறுப்பு தானத்தில் இந்த ஆண்டு இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடம் பெற்றமைக்கான மத்திய அரசின் விருதினை (தொடர்ந்து 6வது முறையாக) மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன், இணை அமைச்சர் அஷ்வினி குமார் சௌபே ஆகியோர் சுகாதாரத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கரிடம் காணொலி மூலம் நடந்த நிகழ்ச்சியில் அறிவித்தனர்.
இந்நிகழ்வில் புதுக்கோட்டை ஆட்சியர் உமா மகேஸ்வரி உடனிருந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், "தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறையை ஊக்குவிக்கும் வகையில் உடல் உறுப்பு தானத்தில் தமிழ்நாடு தொடர்ந்து 6ஆவது முறையாக முதலிடத்திற்கான மத்திய அரசின் விருது பெற்றுள்ளது. இந்த வரலாற்று சிறப்புமிக்க நிகழ்விற்கு முதுகெலும்பாக இருக்கக் கூடிய கொடையாளிகளுக்கு இந்த விருதினை காணிக்கையாக்குகின்றோம்.
தமிழ்நாட்டில் ஆயிரத்து 392 கொடையாளர்களிடமிருந்து 8 ஆயிரத்து 245 உடல் உறுப்புகள் தானமாக பெற்று வழங்கப்பட்டுள்ளது. உடல் உறுப்பு தானத்தை மிகப்பெரிய மக்கள் இயக்கமாக மாற்றியது ஜெயலலிதாவின் அரசாகும். உடல் உறுப்புதானம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் மிகப்பெரிய அளவிலான மாராத்தான் நடத்தப்பட்டு கின்னஸ் சாதனை படைக்கப்பட்டது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் இந்நிகழ்ச்சியில் மனம் திறந்து வெகுவாக பாராட்டினார்கள்.
![மத்திய அரசு வழங்கிய விருது](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/img-20201127-wa0028_2711newsroom_1606475809_70.jpg)
இத்தகைய பாராட்டு கரோனா காலத்தில் மிகச்சிறப்பாக பணியாற்றி வரும் மருத்துவர்கள், செவிலியர்களுக்கு மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு ஊக்கம் அளிப்பதாக உள்ளது. இந்த மகத்தான வரலாற்று சிறப்பு மிக்க விருதினை வழங்கியதற்கு பிரதமர் மோடி, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் உள்ளிட்ட அனைவருக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் " என்றார்.
இதையும் படிங்க: மருத்துவப் படிப்புகளில் இடஒதுக்கீடு வழங்கும் விவகாரம்: குழு அமைக்காத அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு