புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம், சுற்றுலாத் துறை சார்பில் பொங்கல் விழாவானது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் உமா மகேஷ்வரி கலந்துகொண்டு விவசாயிகளுடன் பொங்கலிட்டு மகிழ்ந்தார். தொடர்ந்து, விவசாயிகளுக்கு பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டது. பின்னர், பொங்கல் விழாவில் கண்களுக்கும் செவிகளுக்கும் விருந்தளிக்கும் வகையில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள், பாரம்பரிய விளையாட்டான சிலம்பம், உறியடி போன்ற போட்டிகளும் நடைபெற்றன. இந்த விழாவில் அனைத்துத் துறை அலுவலர்களும் கலந்து கொண்டனர்.
விருதுநகர்:
தைப் பொங்கலை முன்னிட்டு விருதுநகரில் மகளிர் குழுவின் சார்பில் கோலப்போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு பருப்பு, தானிய வகைகளில் ரங்கோலி கோலங்கள், பாரத மாதா உருவ கோலங்கள், விநாயகர் உருவ கோலங்கள், பூக்கோலம், தண்ணீர் கோலம், மயில் கோலம் எனப் பல்வேறு விதமான கோலங்களை வரைந்தனர். பின்னர் போட்டியில் பங்கேற்ற பெண்களுக்குப் பரிசு, சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இப்போட்டியில் பெண்கள் குழு, தனிநபர் என 50க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் தனியார் பள்ளியில் மாணவ - மாணவிகள் ஒன்றாக இணைந்து சமத்துவப் பொங்கலை கிராமிய கலை நிகழ்ச்சியுடன் வெகு விமரிசையாகக் கொண்டாடி மகிழ்ந்தனர். ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் அனைவரும் ஒன்றிணைந்து பள்ளி வளாகத்தில் பொங்கல் வைத்தும் பின் தமிழர் திருநாளை கலாச்சாரத்தை பறைசாற்றும் விதமாக நடைபெற்ற கலைநிகழ்ச்சிகளில் ஆர்வத்துடன் கலந்துகொண்டு கும்மியடித்து இறைவனை வழிபட்டனர்.
மேலும் உறியடி, கிராமிய நடனங்கள், சிலம்பாட்டம் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் மாணவ, மாணவிகள் பங்கேற்று அசத்தினர். குறிப்பாக 300 மாணவ - மாணவிகள் ஏர் கலப்பை வடிவில் அமர்ந்து ஓலைச்சுவடியில் திருக்குறள் எழுதிய நிகழ்ச்சி அனைவரையும் கவர்ந்தது.
உதகை:
உதகை அடுத்த பொக்காபுரத்தில் உள்ள அரசு பழங்குடியினர் நடுநிலைப்பள்ளியில் சமத்துவப்பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. பள்ளி தலைமை ஆசிரியர் கண்ணதாசன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் மாணவர்கள், ஆசிரியர்கள் வேட்டி, சேலை போன்ற தமிழ் காலாசார உடைகளை அணிந்து பள்ளிக்கு வந்திருந்தனர்.
விழாவின் தொடக்கமாக மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் ஆகியோர் தனித்தனியாக மூன்று பானைகளில் பொங்கல் வைத்தனர். அப்போது பொங்கல் பொங்கியதும் அனைவரும் பொங்கலோ, பொங்கல் என சத்தமிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். தொடர்ந்து இருளர் இன ஆதிவாசி மக்களின் பாரம்பரிய இசை கருவிகள் வாசிக்கபட்டன. இதற்கு ஏற்ப பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள் பொங்கல் பானையை சுற்றி வட்டமாக நடனமாடினர்.
இதையும் படிங்க: மாதிரி கிராமத்தை உருவாக்கி பொங்கல் கொண்டாடிய சென்னை காவல் துறையினர்