அரசு அனுமதியின்றி கனிமங்களை வெட்டி எடுத்துச் செல்பவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இது குறித்து மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரி தெரிவித்ததாவது:
புதுக்கோட்டை மாவட்டத்தில் சாதாரண கல், மண், கிராவல்மண், களிமண், சரளைமண், மணல் போன்ற சில கனிமங்களை அரசு அனுமதியின்றி வெட்டியெடுப்பது, அனுமதியின்றி வாகனங்களில் எடுத்துச் செல்வது குற்றம். எனவே, அனுமதியின்றி கனிமங்கள் எடுத்து செல்லும்போது கைப்பற்றப்படும் வாகனங்கள், கனிமங்கள், கனிமங்களை வெட்ட பயன்படுத்தப்படும் கருவிகள், இந்த குற்றச் செயலில் ஈடுபட்டவர்கள் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு குற்றவியல் நடைமுறைகள் தொடரப்படும்.
மேலும் சம்பந்தப்பட்டவர்கள் மீது வருவாய் கோட்டாட்சியரால் மாவட்ட நீதிமன்றங்களில் தனியாக வழக்குப்பதிந்து தொடர் நடவடிக்கை மேற்கொள்ள அரசு உத்தரவிட்டுள்ளது. நீதிமன்ற இறுதி உத்தரவின்பேரில் மட்டுமே பறிமுதல்செய்யப்படும் வாகனங்கள், கனிமங்கள், கனிமங்களை வெட்ட பயன்படுத்தப்படும் கருவிகள் ஆகியன விடுவிக்கப்படும்.
மேலும், அனுமதியின்றி கனிமம் வெட்டியெடுத்து வாகனத்தில் எடுத்துச்செல்லும் குற்றச் செயலுக்கு சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தால் கனிமங்கள், சுரங்கங்கள் மேம்படுத்துதல் மற்றும் ஒழுங்குமுறைச் சட்டம் 1957-இன் படி 5 லட்சம் ரூபாய் அபராதம் மற்றும் 5 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.