நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி ஆகஸ்ட் 22ஆம் தேதி கொண்டாடப்பட்டது. ஆனால், விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் செல்லக் கூடாது எனவும், கடற்கரையில் கரைக்கக் கூடாது எனவும் அரசு அறிவித்தது. கூட்டம் சேர்ந்தால் கரோனா வைரஸ் இன்னும் அதிகமாகும் என்ற நோக்கத்தில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டதாக அரசு தெரிவித்தது.
இதனிடையே அனைத்து மாவட்டங்களிலும் விநாயகர் சிலைகள் செய்யும் பணி ஆண்டுதோறும் ஜனவரி மாதம் முதல் தொடங்கிவிட்டது. அதேபோல புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே துவரடிமனை எனும் கிராமத்தில் வருடம்தோறும் அதிக அளவிலான விநாயகர் சிலைகள் விதவிதமாக செய்து வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தைப் பொறுத்தவரையிலும் இந்தக் கிராமத்தில் தான் அதிக அளவிலான விநாயகர் சிலைகள் செய்யப்படுகின்றன. இந்த ஆண்டு கரோனா வைரஸ் தாக்கத்தினால் சிலைகள் விற்பனை குறைந்த நிலையில், அரசு அறிவித்த அறிவிப்பால் ஏற்கெனவே கொடுத்த ஆர்டர்களும் ரத்து ஆகிவிட்டன. இதனால் விநாயகர் சதுர்த்திக்காக செய்த சிலைகள் அனைத்தும் வீணாகிவிட்டது என அப்பகுதி மண்பாண்டத் தொழிலாளர்கள் வேதனையில் மூழ்கியுள்ளனர்.
வேலைக்கு ஆட்கள் வைத்து, கரம்பை மண்ணை அதிக அளவில் எடுத்து வந்து, விலை மதிப்புள்ள கலர் பெயிண்டுகள் என கிட்டத்தட்ட ஏழு லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்தோம்.
ஆனால், இந்த கரோனா ஊரடங்கால் ஆர்டர்கள் குறைந்தது மட்டுமில்லாமல், தற்போது விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் செல்லக்கூடாது என்ற அறிவிப்பும் எங்களை வேதனையில் தள்ளியுள்ளது. இனி, அடுத்த ஆண்டு வரை இந்த சிலைகளை பாதுகாப்பது என்பது மிக மிகக் கடினம். கண்ணை இமை காப்பது போல காத்து, இரவு பகல் பாராமல் கஷ்டப்பட்டு செய்த சிலைகள் அனைத்தும் இப்படி விற்பனையாகாமல் கிடப்பது மிகுந்த மன வேதனையை அளிக்கிறது.
ஒரு சில நாள்களாக தற்கொலை செய்து கொள்ளலாமா என்ற எண்ணம் கூட தோன்றுகிறது. முதலீட்டையும் இழந்து, தற்போது வாழ்வாதாரத்திற்குச் சிரமப்படும் நிலையில் தவிக்கிறோம். அரசு கவனத்தில் கொண்டு எங்களுக்கு ஏதேனும் உதவி செய்ய வேண்டும். இல்லையென்றால் எங்களது பாரம்பரியத் தொழிலான மண்பாண்டத்தொழிலை விட்டுவிட்டு வேறு தொழிலுக்குச் செல்வதைத் தவிர, வேறு வழியே இல்லை'' என்று கண்ணீருடன் தெரிவித்தார்.
இதையும் படிங்க: காதலில்லாமல் வாழ்வது வாழ்வா? - கோயில் காளையும் டீ கடைக்காரர் பசுவும் காதலர்களான கதை!