'செண்டுமல்லி நாத்து விட்டேன்
செவரேறிப் பாருங்களே
சீதை புலம்புவதை
செண்டு மல்லி வாடுவதை' - என நம் ஊர் திருவிழாக்களில் விடிய விடிய வேடம் தரித்து, சொல்லப்படும் ராமாயணக் கதைகளில், செண்டு மல்லிப் பூ பிரதான இடம்பெற்றிருக்கும்.
தவிர, 1980களில் செண்டு மல்லிப்பூக்கள் எனப்படும், செவ்வந்திப்பூக்களை தமிழ் சினிமாப் பாடல்களில் அதிகம் உலாவவிட்டிருப்பர், நம் தமிழ்க் கவிகள். அதற்கு ஒரு சோறு பத உதாரணம் தான், 'செவ்வந்திப்பூ எடுத்தேன், அதில் உன் முகம் பார்த்திருந்தேன்' உள்ளிட்ட பல்வேறு தமிழ்ப் பாடல்கள். இப்படி தமிழர்களின் வாழ்வியலோடு முக்கிய அங்கம் வகிக்கின்றன, இந்த செண்டு மல்லிப்பூக்கள்.
இத்தகைய செண்டு மல்லிப்பூக்கள் புதுக்கோட்டை மாவட்டம், மாந்தாங்குடி, கீரமங்கலம், கறம்பக்குடி ஆகியப் பகுதிகளில், அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது.
பல்வேறு திருவிழாக்களில் முக்கிய அங்கம் வகிக்கும் இந்தப் பூவானது செவ்வந்திப்பூ, மேரி கோல்டு பூ, துலுக்க மல்லிப் பூ என்றெல்லாம் பல்வேறு பெயர்களில் தமிழ் மக்களால் அழைக்கப்படுகிறது. மருத்துவ குணமுடைய பூ என்பதால், செண்டு மல்லி பூக்களை எண்ணெய் மற்றும் பொடி தயாரிக்கவும், தமிழ்நாடு மட்டுமின்றி நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் விவசாயிகள் இதனைப் பயிரிட்டு வருகின்றனர்.
இத்தகைய சிறப்புமிக்க செண்டு மல்லிப்பூக்கள், இந்த ஆண்டு கடும் விலை வீழ்ச்சியை சந்தித்துள்ளதால், அதனைப் பயிரிட்ட விவசாயிகள் மிகுந்தளவு கவலையடைந்துள்ளனர்.
இதுகுறித்து மாந்தாங்குடியைச் சேர்ந்த விவசாயி ராணி, 'இந்த ஆண்டு செண்டு மல்லிப் பூவின் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது. கிலோ ஒன்றுக்கு வெறும் பத்து ரூபாய்க்கு தான் விற்கப்படுகிறது. பிள்ளைகளைப் போல வளர்த்து இப்படி வெறும் பத்து ரூபாய்க்கு விற்பனைக்குக் கொடுப்பதால் லாபம் இன்றி, உடல் உழைப்பிற்கான வருவாயே மிஞ்சுகிறது. இதனால் வருமானமும் பாதிக்கப்படுகிறது. இந்த செண்டு மல்லிப்பூக்களை கிலோ ஒன்றுக்கு ரூ.30லிருந்து ரூ. 40க்கு வாங்கினால் மட்டுமே, எங்களுக்கு ஓரளவு வருமானம் கிடைக்கும்.
வியாபாரிகளும் மக்களும் பேரம் பேசாமல் விவசாயத்தின் கஷ்டத்தைப் புரிந்து கொண்டு, எங்களிடத்தில் வாங்கிச் சென்றால் நன்றாக இருக்கும்' என்று கூறுகிறார், வேதனையுடன்.
நாட்டின் முதுகெலும்பாக இருக்கும் விவசாயத்திற்கு, உயிர் நாடியாக இருப்பது விவசாயிகள். அவ்வகையில் செண்டு மல்லிப்பூ உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு மக்கள் கரம் கொடுக்க வேண்டிய தருணமிது...!
இயற்கை விவசாயத்தை பாதுகாக்க ஓய்வின்றி உழைக்கும் முன்னாள் வேளாண் அதிகாரி!