ஊரடங்கு காரணமாக அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடியுள்ளது. இதனால், மது கிடைக்காமல் மது பிரியர்கள் தள்ளாடிவருகின்றனர். இதனை பயன்படுத்தி சிலர் மது பாட்டில்களை கள்ளத்தனமாக அதிக லாபத்திற்கு விற்று வருகின்றனர்.
இந்நிலையில், புதுக்கோட்டை ரயில் நிலை பின்புறம் சிலர் மது பாட்டிகள் விற்று வருவதாக ஒதியஞ்சாலை காவல் துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் அங்கு ஆறு பேர் கொண்ட கும்பல் மூட்டை மூட்டையாக மதுபானங்கள் விற்று வந்தது தெரியவந்தது.
பின்னர், காவல் துறையினரைக் கண்ட அந்த கும்பல் அங்கிருந்து ஓடியது. அவர்களை விரட்டிச் சென்று மடக்கி பிடித்த காவல் துறையினர், ஆறு பேரையும் கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
காவல் துறையினர் நடத்திய விசாரணையில், அவர்கள் வாணரப்பேட்டையைச் சேர்ந்த இருதயநாதன், உத்திரவாகினிபேட்டையைச் சேர்ந்த அருண், சிவா, ஜனார்த்தனன், பாஸ்கர் , புவியரசன் என்பது தெரியவந்தது.
மேலும், மது பாட்டில்களை மொத்தமாக வாங்கி அதனை வாணரப்பேட்டை, வில்லியனூர் ஆகிய பகுதிகளில் அதிக விலைக்கு விற்று வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர்களிடமிருந்து 40 ஆயிரம் மதிப்பிளான 600 க்கும் மேற்பட்ட மது பாட்டில்களை காவல் துறையினர் பறிமுதல் செய்து விடாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: ’மது குடிக்காதீங்க’- அறிவுரை வழங்கியவருக்கு வெட்டு: அதிரவைக்கும் சிசிடிவி காட்சி