புதுக்கோட்டை: பொற்பனைக்கோட்டையில் கடந்த 30ஆம் தேதி முதல் அகழ்வாராய்ச்சிப் பணிகள் நடைபெற்று வருகின்றன. தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைக்கழக பேராசிரியர் இனியன் இதற்கு திட்ட இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அகழ்வாராய்ச்சி பணிகள்
அவரது தலைமையில் 50க்கும் மேற்பட்ட தொல்லியல் ஆர்வலர்கள், தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைக்கழக வரலாற்றுத்துறை மாணவர்கள் ஆகியோர் அகழ்வாராய்ச்சிப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த பத்து நாள்களில், சங்க காலத்தில் பயன்படுத்தப்பட்ட நவரத்தினக் கற்கள், மணிகள், பானைகள், குடுவைகள் ஆகியவை கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், நேற்று (ஆகஸ்ட்.12) நடந்த அகழ்வாராய்ச்சியில் இரண்டு அடி பள்ளத்தில் நீர் வெளியேற்றுவதற்கான கால்வாய் வாய்க்காலின் ஒரு பகுதி கண்டறியப்பட்டது.
நீர் வெளியேற்றும் கால்வாய் கண்டெடுப்பு
இதில் பயன்படுத்தப்பட்டுள்ள செங்கற்களை வைத்து பார்க்கும்போது இந்த உபரி நீர் கால்வாய் கி.பி. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கும் என கணக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து அகழ்வாராய்ச்சி திட்ட இயக்குநர் இனியன் கூறுகையில், “நடைபெற்று முடிந்த அகழ்வாராய்ச்சியில் நீர் வெளியேற்றும் கால்வாயின் ஒரு பகுதி கண்டறியப்பட்டுள்ளது.
தொடர்ச்சியாக ஆய்வு செய்தால் இது எங்கிருந்து வருகிறது, எந்த நோக்கத்திற்காக இந்தக் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது உள்ளிட்ட பல விஷயங்களும் தெரியவரும்” என்றார்.
இதையும் படிங்க: ஆயிரம் ஆண்டு பழமையான சப்தமாதர்கள் சிற்ப தொகுப்பு கண்டெடுப்பு