புதுக்கோட்டையில் இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது மனைவி துர்காவுடன் திருமணத்தை தலைமையேற்று நடத்தி வைத்தார். அப்போது விழாவில் பேசிய அவர், ”திமுகவில் எத்தனை அணி இருந்தாலும் இளைஞரணி தான் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கரோனா காலமாக இருப்பதால் தற்போது திருமணங்களைக்கூட காணொலி மூலம் நடத்த வேண்டிய சூழ்நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம்.
இன்னும் மூன்று மாதங்களில் நாம் தான் ஆட்சிக்கு வரப் போகிறோம். இதை நான் ஆணவத்தால் சொல்லவில்லை. இரண்டு கட்ட தேர்தல் பிரச்சார முடித்து, மூன்றாவது கட்ட பிரச்சாரத்தை வரும் 12 ஆம் தேதி தொடங்கவுள்ளேன். அந்நேரங்களில் மக்கள் எழுச்சி அதைத்தான் சொல்கிறது.
எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் ஆனது எப்படி என்பது அனைவருக்கும் தெரியும். அதை நாங்கள் கூறினால் அவர் கோபப்படுவார். ஆனால் அப்போது அவர் தவழ்ந்து வந்தது உண்மையா இல்லையா என்பதுதான் எனது கேள்வி. சமூக வலைதளங்கள் மூலமாக பொதுமக்கள் அந்தக் காட்சியை தற்போதும் பார்த்து வருகின்றனர்.
சசிகலா தற்போது பெங்களூரில் இருந்து அதிமுக கொடியுடன் வந்து கொண்டிருக்கிறார். என்ன நடக்கப் போகிறதோ என்று தெரியவில்லை. ஆனால் எது நடக்க வேண்டுமோ அது கண்டிப்பாக நடந்தே தீரும்” என்று பேசினார்.
இதையும் படிங்க: சசிகலாவை வரவேற்க பட்டாசுகள் கொண்டு வந்த காரில் தீ விபத்து