புதுக்கோட்டை: நகராட்சிக்குட்பட்ட 42 வார்டுகளிலும் ஒப்பந்த அடிப்படையில் 206 தூய்மைப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் நேற்று(ஜூன்.28) காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், கடந்த மூன்று மாத சம்பளம் வழங்கப்பட வேண்டும், தேவையான கருவிகள் வழங்க வேண்டும், தினந்தோறும் முகக்கவசம் வழங்கப்பட வேண்டும், மேற்பார்வையாளர்கள் கடுமையான சொற்களால் திட்டுகிறார்.
மேலும் பல பணியாளர்களிடம் மாதம் 500 ரூபாய் மேற்பார்வையாளர் வாங்குகிறார் என பல்வேறு கோரிக்கைகளுடன் தூய்மைப் பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம் செய்தனர்.
ஒரு காலகட்டத்தில் தங்களது உயிரையும் பொருட்படுத்தாது பணியாற்றி வரும் தூய்மை பணியாளர்களுக்கு உடனடியாக சம்பளம் வழங்க வேண்டும் என தூய்மைப் பணியாளர்கள் கடந்த மூன்று மாத காலமாக பல கட்ட போராட்டங்களை நடத்தினர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். அப்போது ஒரு சில நாட்களில் சம்பளம் வழங்கப்படும் என்று அலுவலர்கள் உறுதியளித்தனர். ஆனால் நேற்று(ஜூன்.29) இரவு வரை ஊதியம் வழங்கப்படாததைக் கண்டித்து அதிர்ச்சியடைந்த நூற்றுக்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள், புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகே தரையில் அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் புதுக்கோட்டை நகராட்சியில் கழிவுகள், குப்பைகள் அகற்றப்படாமல் தேங்கி கிடக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. மேலும் சுகாதார சீர்கேடு ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. எனவே உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தி சம்பளம் வழங்குவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் நகராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக சைலேந்திர பாபு நியமனம்