புதுக்கோட்டை மணமேல்குடி தாலுகா கிருஷ்ணாஜிபட்டிணத்தைச் சேர்ந்தவர் ராஜதுரை (26). இவர் சிறுகாசாவயல் கிராமத்தைச் சேர்ந்த ராமலிங்கம் என்பருடைய பிக்கப் வாகனத்திற்கு ஓட்டுநர் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் தற்போது கரோனா எதிரொலி காரணமாக ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளதை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட, ராஜதுரை தான் ஓட்டுகின்ற வாகனத்தில் "பால்வண்டி அவசரம் தடுக்காதே" என எழுதி ஒட்டிக்கொண்டு, மணல் கடத்தி விற்பதை வாடிக்கையாகக் கொண்டு இருந்திருக்கிறார்.
இவர் பெருமருதூர் ஆற்றுப் பகுதிகளிலிருந்து மணல் ஏற்றிக் கொண்டு வழக்கம்போல் ராஜதுரை விற்பனைக்காக கிளம்பியுள்ளார். அப்போது சந்தேகத்திற்கிடமாக வாகனத்தின் பின்புறம் தண்ணீர் வழிந்ததைக் கண்ட காவல் துறையினர், வண்டியைப் பின் தொடர்ந்துள்ளனர். இதை அறியாத ராஜதுரை வாகனத்தை ஒரு வீட்டின் முன்பு நிறுத்தி, மணலை இறக்கியுள்ளார்.
இதனையடுத்து காவல் துறையினர் ராஜதுரையை கையும் களவுமாக பிடித்துள்ளனர். இதனை சற்றும் எதிர்பாராத ராஜதுரை, 'தான் மாட்டிக் கொண்டோமே' என்ற எண்ணத்தில் தப்பிப்பதற்காக லிவரை எடுத்து காவலரைத் தாக்கியுள்ளார். அதோடு மட்டுமல்லாது அருகே இருந்த வீட்டிற்குள் நுழைந்து அங்கிகுந்த முகம் பார்க்கும் கண்ணாடியை உடைத்து, கழுத்தை அறுத்துக் கொண்டு தற்க்கொலைக்கு முயற்சி செய்துள்ளார்.
உடனே, காவல் துறையினர் ராஜதுரையை மீட்டு, அவசர ஊர்தி மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் 144 தடை உத்தரவின் போது, சட்டத்திற்கு புறம்பாக மணல் கடத்தலில் ஈடுபட்டதால் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டும் வருகின்றனர்.
இதையும் படிங்க: துப்புரவுப் பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு முட்டை வழங்கிய அமைச்சர்