புதுக்கோட்டை மாவட்டம், வெங்கடகுளம் அருகேயுள்ள வளச்சேரிபட்டியைச் சேர்ந்தவர் பாண்டியன். இவர் அப்பகுதியில் உள்ள பனைமரத்தில் நுங்கு வெட்டுவதற்காக சென்றுள்ளார். அப்போது, அங்கிருந்த ஜெகதீசன் என்பவர் தனது கூட்டாளிகள் நான்கு பேருடன் சேர்ந்து இது எங்கள் இடத்திலுள்ள பனைமரம் இதில் நுங்கு வெட்டக்கூடாது எனக் கூறி தடுத்துள்ளார்.
இதனால், இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளாக மாறியது. இதில், ஐந்து பேரும் சேர்ந்து பாண்டியனை சராமரியாகத் தாக்கியுள்ளனர். இதில் தலையில் படுகாயமடைந்த பாண்டியன் மயங்கி கீழே விழுந்தார்.
இதைத்தொடர்ந்து, பாண்டியனின் உறவினர்கள் அவரை மீட்டு வெண்ணாவல்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே பாண்டியன் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவலறிந்து ஆலங்குடி காவல் துணை கண்காணிப்பாளர் முத்துராஜா சம்பவ இடத்திற்குச் சென்று உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்விற்காக புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
அதைத் தொடர்ந்து, பாண்டியனை கொலை செய்தவர்களை கைது செய்யக் கோரி உறவினர்கள் மருத்துவமனை வளாகத்தில் காவல் துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் பாண்டியன் கொலைக்கு காரணமான ஜெகதீசன் என்பவரை காவல் துறையினர் கைது செய்தனர்.
மேலும் நான்கு பேரை வலைவீசி தேடி வருகின்றனர். பனை மரத்திலிருந்து நுங்கு வெட்டுவதில் ஏற்பட்ட தகராறில் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:திமுக பிரமுகர் கொலை வழக்கு: 5 பேர் குண்டர் சட்டத்தில் கைது!