புதுக்கோட்டை : திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இக்கோயிலில் மாசித் திருவிழா கடந்த வாரம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் சர்வ அலங்காரத்தில் முத்துமாரியம்மன் ஒவ்வொரு வாகனத்திலும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். விழாவின் முக்கிய நாளான இன்று மாலை தேரோட்டம் வெகுவிமரிசையாக நடைபெற்றது.
தேரோட்டத்தை முன்னிட்டு காலை முதல் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பால் காவடி அலகு குத்தி மாவிளக்கு போட்டு தங்களது நேர்த்திக் கடன்களை பக்தர்கள் காணிக்கையாக அம்மனுக்கு செலுத்தினர்.
மாலை சர்வ அலங்காரத்தில் முத்துமாரி அம்மன் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளினார். இதன் பின்னர் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, ஆட்சியர் கவிதா ராமு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன் மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து தேர் திருவிழாவைத் தொடங்கி வைத்தனர்.
தேர் நான்கு வீதிகள் வழியாக பக்தர்களின் கோஷத்துடன் வலம் வந்தது. தேரோட்டத்தை முன்னிட்டு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சிறப்பு பேருந்துகளை தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் இயக்கியது. மேலும் இன்று மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.