புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசலை அடுத்த முதலிப்பட்டிபோக்குளம் குளத்துக்கு அருகே அடையாளம் தெரியாத பெண் ஒருவர் இறந்த நிலையில் கிடப்பதைக் கண்டு அந்தப் பக்கம் சென்றவர்கள், காவல் துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த அன்னவாசல் காவல் துறையினர் அடையாளம் தெரியாத அந்த உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக புதுக்கோட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், இறந்தவர் சித்துாரைச் சேர்ந்த பழனி என்பவரின் மனைவி சுப்பமாள்(70) என்பதும், இவர் விளாம்பட்டியில் உள்ள தனது பேத்தி பிரியா வீட்டிற்குச் சென்று அவரைப் பார்த்துவிட்டு திரும்பியதாகவும் தெரியவந்துள்ளது. இந்த நிலையில் இவர் எப்படி இறந்தார் என காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.