சென்னை: சட்டப்பேரவை கூட்டுத்தொடரின் 5ம் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில், கேள்வி நேரத்தின் போது, புதுக்கோட்டை நகராட்சி, மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படுமா? என புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்து பேசிய நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, "திமுக ஆட்சி அமைந்த பிறகு 28 நகராட்சிகள், 6 மாநகராட்சிகள் தரம் உயர்த்தப்பட்டுள்ளது. ஒரு மாநகராட்சியை உருவாக்கும் போது அதன் மக்கள் தொகை 3 லட்சம் இருக்க வேண்டும் என்பது அரசின் கொள்கை முடிவாக இருக்கிறது.
புதுக்கோட்டையை பொறுத்தவரை இப்போது ஒரு லட்சத்து 68 ஆயிரத்து 900 பேர் மட்டுமே மக்கள் தொகை இருக்கிறது. இதனிடையே புதுக்கோட்டை சுற்றுவட்டாரத்தில் உள்ள ஊராட்சி, பேரூராட்சிகளை மாநகராட்சியுடன் இணைத்தால் மக்கள் தொகை 3 லட்சமாக உயரும். அதன் பிறகு வேண்டுமானால் புதுக்கோட்டை நகராட்சியை மாநகராட்சியாக உயர்த்தலாம்.
ஆனால், புதுக்கோட்டை சுற்றுவட்டாரத்தில் உள்ள ஊராட்சி, பேரூராட்சிகளில் உள்ளாட்சி அமைப்புகளில் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகள் இருப்பதால் அவர்களது பதவிக்காலம் முடியும் போது தான் இந்த இணைப்பு குறித்து முடிவெடுக்கப்படும். புதுக்கோட்டை நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை குறித்து முதலமைச்சருடன் கொண்டு சேர்க்கப்படும்” என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: "ஆளுநருக்கு அறிவுரை கூறுங்கள்" குடியரசுத் தலைவருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்!