புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குழந்தைகள் பாதுகாப்புக் குழு சிறப்பு ஆலோசனைக் கூட்டம் ஆட்சியர் உமாமகேஸ்வரி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்குப் பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தமிழ்நாடு அரசு குழந்தைகளுக்கு எதிராக வன்கொடுமை நிகழாத வண்ணம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டம் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் நடைபெறாத மாவட்டமாக உருவாக்க குழு அமைக்கப்பட்டுள்ளது.
இக்குழு மாவட்ட ஆட்சியரைத் தலைவராகவும், மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், மாவட்ட சமூக நல அலுவலர், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர், மருத்துவப் பணி இணை இயக்குநர், மாவட்ட குழந்தைகள் நல அலுவலர், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர், மாவட்ட தொழிலாளர் நலத் துறை அலுவலர், தொண்டு நிறுவனப் பிரதிநிதிகள் ஆகியோரை உறுப்பினர்களாகவும் கொண்டு செயல்பட்டுவருகிறது.
இக்குழு ஒவ்வொரு மாதமும் கூடி, குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக பெண் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் பாலியல் வன்கொடுமைகள் உள்ளிட்ட பிரச்னைகள் நடைபெறும் இடங்களைக் கண்டறிந்து, அப்பகுதிகளில் அதிக கவனம் செலுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக வருவாய் கோட்டாட்சியர் அளவில், வட்டார அளவில் மற்றும் பஞ்சாயத்து அளவில் குழுக்கள் அமைத்து, இக்குழு மூலம் கூட்டம் நடத்தி, குழந்தைகளின் பாதுகாப்பில் பெற்றோரின் பங்கு, குழந்தைகள் பாதுகாப்பு தொடர்புடைய குட் டச், பேட் டச், பெண் குழந்தைகளுக்கான சிறப்புத் திட்டங்கள், குழந்தைகள் தொடர்பான பிரச்னைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் குழந்தைகளுக்கு ஏற்படும் பிரச்னைகளைத் தடுத்தல் தொடர்பான விரிவான செயல்திட்டம் தயாரித்து, அத்திட்டத்தினை அலுவலர்கள் தீவிரமாகச் செயல்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த அங்கன்வாடி வளர்ச்சித் திட்டத்தின் கீழ் பணியாற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் தங்கள் பகுதியிலுள்ள குழந்தைகளின் வீடுகளுக்கு உலர் உணவுப் பொருள்கள் வழங்கும்போது தாய்மார்களுக்கு குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து விரிவாக எடுத்துரைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குழந்தைகளுக்கு ஏற்படும் பிரச்னைகள் பெரும்பாலும் அருகில் உள்ள நபர்களாலும், உறவினர்களாலும், தெரிந்த நபர்களாலும் நடைபெறுவதால் பெற்றோர்கள் குழந்தைகள் பாதுகாப்பில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். மேலும் குழந்தைகளுக்கு எதிராகக் குற்றம் புரிபவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
குழந்தைகள் தொடர்பான எந்தப் பிரச்னையாக இருந்தாலும் 1098 என்ற இலவச எண்ணிலோ அல்லது மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம், அங்கன்வாடி மையங்கள் ஆகியவற்றில் தகவல் தெரிவித்து தீர்வு பெறலாம். குழந்தைகளைப் பராமரிக்க இயலாதவர்கள் தங்கள் குழந்தைகளை, குழந்தைகள் காப்பகத்தில் சேர்த்து பாதுகாத்திட அரசு வழிவகை செய்துள்ளது. அவ்வாறு குழந்தைகளைச் சேர்க்க விரும்பினால் 04322-221266 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்" எனத் தெரிவித்தார்.