புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பிரகாஷ் என்பவர் வங்கிகளில் லோன் வாங்கி தருவதாகக் கூறி விஸ்டிங்கார்ட், துண்டு பிரசுரங்களை வழங்கியுள்ளார். அவரின் இந்த விளம்பரத்தை பார்த்த இலுப்பூர் அருகே உள்ள மாரப்பட்டியைச் சேர்ந்த ஜெயராஜ் (30) என்பவர் பிரகாஷை போனில் தொடர்புகொண்டு தனக்கு பத்து லட்சம் லோன் வாங்கி தரும்படி கேட்டுள்ளார்.
இதையடுத்து ஜெயராஜின் வீட்டிற்குச் சென்ற பிரகாஷ், அவரிடம் அசல் ஆவணங்களை பார்க்க வேண்டும் எனக் கூறி அனைத்தையும் பார்த்திருக்கிறார். அப்போது அவரது ஏடிஎம் கார்டை எடுத்துவிட்டு அதற்கு பதிலாக போலி ஏடிஎம் கார்ட்டை ஜெயராஜிடம் கொடுத்துள்ளார். மேலும், வங்கியில் பத்து லட்சம் லோன் பெற வேண்டுமென்றால் உங்களின் வங்கி கணக்கில் ரூ. 1.50 லட்சம் பணம் இருக்க வேண்டும் என்று கூறிய பிரகாஷ், பணத்தை வங்கியில் செலுத்தியவுடன் தன்னை தொடர்பு கொள்ளுமாறு கூறிச் சென்றுள்ளார்.
இதை உண்மை என நம்பிய ஜெயராஜ், மறுநாள் அவரது வங்கி கணக்கில் ரூ.1.50 லட்சம் செலுத்தியுள்ளார், பின் பணத்தை போட்ட விபரத்தையும் பிரகாஷ்சிடம் கூறியுள்ளார். இந்த சந்தரப்பத்தை பயன்படுத்திய பிரகாஷ் பணத்தை எடுத்துகொண்டார்.
ஜெயராஜ் ஏடிஎம் சென்று பணம் எடுக்க முயன்றபோது ஏடிஎம் கார்டு வேலை செய்யாமல் இருந்துள்ளது. பின்னர் அவர் வங்கியை தொடர்பு கொண்டபோது அவர் வைத்திருந்த ஏடிஎம் கார்டு போலியானது என தெரியவந்தது. அதன்பின்னர் ஜெயராஜ், உடனடியாக பிரகாஷை தொடர்பு கொள்ள முயற்சித்தபோது பிரகாஷின் செல்போன் அணைக்கப்பட்டிருந்தது. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த ஜெயராஜ் இலுப்பூர் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்தார்.
அதைத் தொடர்ந்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், கீரனூர் பகுதியில் பதுங்கியிருந்த பிரகாஷை கைதுசெய்தனர். மேலும் அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் ஈரோடு மாவட்டம் மூலப்பாளையம் சோமசுந்தரம் மகன் என்பதும் இது போன்று மோசடி வேலையில் ஈடுபடுவதும் தெரியவந்தது.
இதனையடுத்து அவரிடம் இருந்த ரூ.95 ஆயிரம், லேப்டாப், இரண்டு செல்போன்கள், 40 போலி ஏடிஎம் கார்டுகள், போலி ஆதார் கார்டு, பான் கார்டு, ஓட்டுநர் உரிமம் போன்ற ஆவணங்கள், இருசக்கர சக்கர வாகனம் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்த காவல் துறையினர் அவரை சிறையில் அடைத்தனர்.
மேலும் படிக்க: ராணுவ வீரர் என்று கூறி 1 லட்சம் ரூபாய் மோசடி!