தமிழ்நாட்டில் குடிநீர்ப் பஞ்சம் அதிக அளவில் ஏற்பட்டுள்ளது. இதனால் பல்வேறு மாவட்டங்களில் குடிநீருக்காக சாலைமறியல் உள்ளிட்ட போராட்டங்கள் நடந்து வருகின்றன.
இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் அடிபம்பு நீர், ஊற்றுத் தண்ணீர் ஆகியவற்றை மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள். மேலும் முக்கிய இடங்களில் காவிரி குடிநீரும் விடப்படுகிறது.
அம்மாவட்டத்தில் உள்ள பூங்கா நகர், பெரியார் நகர், திருக்கோகர்ணம், சார்லஸ் நகர், போன்ற முக்கிய பகுதிகளில் காவிரி குடிநீர் வரும் குழாய்கள் உடைந்து, சாலை முழுவதும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருக்கிறது.
இப்படி தண்ணீர் வீணாகப்பட்டால், தங்களுக்குக் கிடைக்க வேண்டிய கொஞ்சநஞ்ச தண்ணீரும் எப்படி வரும் என அம்மக்கள் கேள்வியெழுப்பியுள்ளனர். குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்களின் அலட்சியத்தால் இதுபோல ஆங்காங்கே தண்ணீர் வீணாவதாக அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.