புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதில் 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொணடு தங்கள் குறைகளை மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்தனர்.
அப்போது, "புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் சங்கத்தினர், கஜா புயலின்போது எங்கள் பயிர்கள் மிகவும் பாதிப்படைந்தது. பாதிப்படைந்த பயிர்களுக்கான காப்பீட்டுத் தொகை இதுவரையிலும் எங்களுக்கு வழங்கப்படவில்லை. புதுக்கோட்டையைச் சுற்றியுள்ள அனைத்து மாவட்டங்களிலுள்ள விவசாயிகள் அனைவருக்கும் காப்பீட்டுத்தொகை கிடைத்துவிட்டது.
கஜா புயலில் கடுமையாக பாதிக்கப்பட்ட புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள விவசாயிகளுக்கு மட்டும் இன்னும் காப்பீட்டுத்தொகை கிடைக்கவில்லை" என்று மாவட்ட ஆட்சியரிடம் கேள்வி எழுப்பி முறையிட்டனர்.
உடனடியாக மாவட்ட ஆட்சியர் சம்பந்தப்பட்ட அலுவலர்களைத் தொடர்புகொண்டு பேசினார். பின்னர், தீபாவளிக்குள் காப்பீட்டுத் தொகை கிடைக்க ஏற்பாடு செய்கிறேன் என்று விவசாயிகளுக்கு உறுதியளித்தார்.
இது குறித்து புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் சங்கச் செயலாளர் பொன்னுச்சாமி பேசுகையில், "ஓராண்டுக்கும் மேலாக இந்தக் காப்பீட்டுத் தொகை கிடைக்காமல் விவசாயிகள் மிகுந்த சோகத்திலுள்ளனர்.
அலுவலர்களிடம் இதுபற்றி முறையிட்டால் இன்னும் பணம் வரவில்லையென்று அலட்சியமாக பதில் கூறுகின்றனர். நிலைமை இப்படியே தொடர்ந்தால் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்வதைத் தவிர வேறு வழியில்லை" என்றார்.
இதையும் படிங்க: ஆட்சியர் அலுவலகத்தில் மண்டியிட்டு மனு கொடுத்த விவசாயிகள்!