புதுக்கோட்டை மாவட்டம் வவ்வாநேரியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியம். இவர் வீட்டில் உள்ள மாடுகளுக்காக பரம்பூரில் உள்ள உறவினர் வீட்டில் இருந்து வைக்கோல் எடுத்துக்கொண்டு டிராக்டரில் ஒன்றில் சென்றுகொண்டிருந்தார்.
இதையடுத்து குளவாய்ப்பட்டி சாலை அருகேயேள்ள வயல் காட்டுக்குள் வந்தபோது, அங்கிருந்த மின்சார கம்பிகள் தாழ்வாகச் சென்றுள்ளது.
அதைக் கவனிக்காத டிராக்டர் ஓட்டுநர், அந்த வழியாக சென்றபோது, டிராக்டரிலிருந்த வைக்கோல் மின்சார கம்பியில் பட்டு தீ பிடித்துள்ளது.
இதன் பின்பு புகை வருவதை அறிந்த ஓட்டுநர் கீழே இறங்கி பார்ப்பதற்குள் தீ மளமளவென கொழுந்துவிட்டு எரிந்தது.
இதனையடுத்து சுற்றுப் பகுதியில் இருந்த பொதுமக்கள் குடங்களில் தண்ணீரை கொண்டுவந்து பற்றி எரிந்துகொண்டிருந்த தீயை அணைக்க முயற்சித்தனர். ஆனால் தீயை அணைக்க முடியவில்லை.
இதைத்தொடர்ந்து, இது குறித்து இலுப்பூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் அளித்தனர். பின்னர் சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு நிலைய அலுவலர் கருணாநிதி தலைமையிலான வீரர்கள், போராடித் தீயை அணைத்தனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.