கரோனா ஊரடங்கால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கியுள்ளனர். அவ்வப்பொது அரசு தளர்வுகள் வழங்கினாலும், இன்னும் பழைய நிலை திரும்பவில்லை, பெரும்பான்மையான மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
பசியைப் போக்கும் பெரும் பணி
குறிப்பாக தினக் கூலித் தொழிலாளர்கள், சாலையோரத்தில் வசிக்கும் ஆதரவற்றவர்கள் என பலரும் உணவில்லாமல் பசியில் வாடுகின்றனர். இவர்களுக்கெல்லாம் நல் உள்ளம் கொண்ட பலர் தாமாக முன்வந்து உதவிக்கரம் நீட்டி வருகின்றனர்.
அந்தவகையில் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த " பிரபாகரன் புரட்சி விதைகள்” என்ற அமைப்பினர், ஏழை,எளிய மக்களின் பசியை போக்கும் பெரும் பணியைச் செய்து வருகின்றனர். இவர்கள் கேட்கும் நிதியும், நிதி திரட்டும் வழியும் வியக்க வைக்கிறது.
7 ரூபாய் போதும்
ஒரு நபரின் ஒருவேளை உணவிற்கு 7 ரூபாய் நிதி கொடுத்தால் போதும் என்று வாட்ஸ்அப், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் பொதுமக்களிடம் நிதி திரட்டுகின்றனர். இதனைப்பார்த்த பலரும் தங்களால் இயன்ற நிதியைக் கொடுத்து உதவுகின்றனர்.
இது குறித்து அந்த அமைப்பைச் சேர்ந்த எடிசன் கூறுகையில், "கடந்த ஆண்டு ஊரடங்கு தொடக்கத்திலிருந்தே இந்தப் பணியை செய்து வருகிறோம். வாரத்தில் 7 நாளும் 7 வகையான உணவு தயாரித்து கொடுக்கிறோம். தற்போது 250 முதல் 300 பேருக்கு உணவளித்து வருகிறோம். பல்வேறு தரப்பினரும் எங்களுக்கு உதவி செய்து வருகின்றனர். அவர்களுக்கு எங்களது நன்றிகள். கரோனா பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றி சேவையில் ஈடுபடுகிறோம். புதுக்கோட்டை மாவட்டத்தில் யாரும் உணவின்றி பட்டினியில் இருக்க கூடாது, அதற்கு எங்களால் முடிந்த சேவையை செய்வோம் " என்று நம்பிக்கையுடன் கூறினார்.
இதையும் படிங்க: 'மரம் செய விரும்பு' - ஊரடங்கு காலத்திலும் ஊருக்காக வாழும் நண்பர்கள்