ஆவுடையார்கோவில் - பொன்பேத்தி கிராமத்தைச் சுற்றி அமைந்துள்ள 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் விவசாயம் செய்யப்பட்டுவருகிறது. இப்பகுதியில் அறுவடை செய்யப்படும் நெல்லை அரசு நேரடியாக கொள்முதல் செய்கிறது. இப்பகுதியில், முறையான நெல் கொள்முதல் நிலையம் இல்லாததால், விவசாயிகள் நெல் மூட்டைகளை திறந்தவெளியில் அடுக்கி வைத்துள்ளனர்.
திடீரென மழை பெய்தால் அனைத்து நெல் மூட்டைகளும் வீணாகிவிடும் நிலையுள்ளது. இதுகுறித்து அப்பகுதி விவசாயி தெரிவிக்கையில், "சுற்றியிருக்கிற ஊர்களில் எல்லாம் விவசாயம் பார்த்தாலும், பொன்பேத்திதான் தாய் கிராமமாக விளங்குகிறது.
இங்கு விளையும் நெல்லைத்தான் அரசு நேரடியாக கொள்முதல் செய்கின்றது. அதற்கு தகுந்தபடி நெல் கொள்முதல் நிலையம் இப்பகுதியில் இல்லை. எனவே, அரசு இதில் கவனம் செலுத்தி அதற்கான கட்டடம் கட்டித் தரவேண்டும். இல்லையென்றால் பொதுமக்கள் சேர்ந்து இடத்தை ஒதுக்கித் தருகிறோம். அதில் அரசு கட்டடம் கட்டித் தரவேண்டும்" என்று கோரிக்கை விடுத்தார்.
இதையும் படிங்க: ’உணவு பொருட்களை வாங்குவதில் நுகர்வோருக்கு கவனம் தேவை’