புதுக்கோட்டை: பொன்னமராவதி அருகே பொது சுடுகாட்டை ஆக்கிரமித்து பிணத்தை அடக்கம் செய்யவிடாமல் தடுத்த ஆக்கிரமிப்பாளர்களை கண்டித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பொன்னமராவதி ஒன்றியம் பி. உசிலம்பட்டி பஞ்சாயத்தில் உள்ள ஏனமேடு என்கிற பகுதியில் கடந்த சுமார் 30 ஆண்டுகளுக்கு மேலாக அனைத்து மக்களும் பயன்படுத்தக்கூடிய பொது சுடுகாடு உள்ளது. அதை தனிநபர் ஆக்கிரமித்து கம்பிவேலி முள்வேலி அமைக்கப்பட்டபோதே உடனடியாக நடவடிக்கை எடுத்து சுடுகாட்டை மீட்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென சிபிஎம் பொன்னமராவதி ஒன்றியக் குழு வலியுறுத்தினர்.
இந்தநிலையில் இன்று இறந்துபோன ஏனமேட்டை சேர்ந்த எம்.செல்வராஜ் (63) என்பவர் உடலை புதைக்க அந்த ஊர் மக்கள் சுடுகாட்டிற்கு சென்ற போது மேற்படி சுடுகாட்டை பட்டா இருப்பதாக கூறி ஆக்கிரமித்துள்ள பி.உசிலம்பட்டியை சேர்ந்த ராமசாமி என்பவர் பிணத்தை சுடுகாட்டில் புதைக்கவிடாமல் ஊர் மக்களை தடுத்து மிரட்டியுள்ளார்.
இது குறித்து தகவலறிந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சம்பவ இடத்திற்கு சென்று மக்களை திரட்டி பிணத்தை சுடுகாட்டிலேயே வைத்து சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்படுத்தி வந்த சுடுகாட்டில் இறந்தவரின் உடலை புதைக்க அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் நீதி வேண்டி ஆட்சியர் அலுவலகத்திற்கு பிணத்தை எடுத்துச் சொல்வோம் என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொன்னமராவதி வட்டாட்சியர் திருநாவுக்கரசு, காவல் துணை கண்காணிப்பாளர் செங்கமலக்கண்ணன் உள்ளிட்டோர் தலைமையிலான அலுவலர்கள் பேச்சுவார்த்தை நடத்தி காலங்காலமாக பயன்படுத்தி வந்த அதே இடத்தில் பிணத்தை அடக்கம் செய்ய நடவடிக்கை எடுத்ததை அடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
இதையும் படிங்க: மதங்களை கடந்த சுடுகாடு!