புதுக்கோட்டை: தமிழ்நாடு பட்டயச் சான்றிதழ் உடற்கல்வி ஆசிரியர் சங்க மாநில பொதுக்குழு கூட்டம் மாநிலத் தலைவர் விஜய் தலைமையில் புதுக்கோட்டையில் உள்ள ஆரோக்கிய மாதா மக்கள் மன்றத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய முறையை நடைமுறைப்படுத்த வேண்டும். அரசாணை 177ல் உள்ள முதலாவது, இரண்டாவது என்கின்ற படிநிலையை களைந்து அனைத்து உடற்கல்வி ஆசிரியர்களும் தங்களது பணி காலத்தில் இரண்டு ஊக்க ஊதியம் பெற்றிடும் வகையில் அரசாணையை திருத்தம் செய்து அரசாணை வெளியிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இதனையடுத்து மாநிலத் தலைவர் விஜய் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், "ஆறு முதல் பத்தாம் வகுப்பு வரையிலான அனைத்து மாணவர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை சார்பில் உடற்கல்வி பாடப் புத்தகங்களை அரசே வழங்கிட வேண்டும், என்றும் அரசாணை 177ல் உள்ள முதலாவது, இரண்டாவது என்கின்ற படிநிலையை களைந்து அனைத்து உடற்கல்வி ஆசிரியர்களும் தங்களது பணி காலத்தில் இரண்டு ஊக்க ஊதியம் பெற்றிடும் வகையில் அரசாணையை திருத்தம் செய்து அரசாணை வெளியிட வேண்டும்.
ஆண்டுதோறும் அரசு உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கு தரமான விளையாட்டு உபகரணங்கள் வழங்கிட நிதி ஒதுக்கீடு செய்து தர வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வு முறையை நடைமுறைப்படுத்த வேண்டும்" என்று வலியுறுத்தினார். இந்த பொதுக்குழு கூட்டத்தில் உடற்கல்வி ஆசிரியர்கள் பலர் பங்கேற்றனர்.