புதுக்கோட்டை : கிள்ளனூர் மற்றும் அதனைச் சுற்றிய பகுதிகளான கீழையூர், ஆழ்வாய்பட்டி, அரையான்பட்டி உள்ளிட்டப் பகுதி கிராமங்களில் இருந்த கோயில்களின் வெளியே மாட்டப்பட்டிருந்த வெள்ளி குத்துவிளக்கு, மணி உள்ளிட்ட பொருள்களைத் திருடிக்கொண்டு ஒரு கும்பல் ஆட்டோவில் தப்பியதாக கூறப்படுகிறது.
இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள் ஆட்டோவில் தப்பிச்செல்லும் கும்பலை இருசக்கர வாகனங்களில் சென்று விரட்டிப்பிடிக்க முயன்றனர். ஆனால், ஆட்டோவில் வந்த கும்பல் வேகமாக ஓட்டிச்சென்றதால் அவர்களைப் பின் தொடர்ந்து வந்த ஊர் மக்களும், இளைஞர்களும் புதுக்கோட்டை நகர் பகுதிக்குள் இருக்கும் மச்சுவாடி எனும் இடத்தில் அந்த ஆட்டோவை வழிமறித்து பிடித்தனர். கிட்டத்தட்ட சுமார் 20 கி.மீட்டர் சேஸிங்கிற்குப்பின், பிடித்தனர்.
இதில் பொதுமக்கள் சிலர் அந்தக்கொள்ளை கும்பலைச்சேர்ந்த சிலரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனிடையே அந்த ஆட்டோவில் இருந்த 10 வயது சிறுமி படுகாயமடைந்தார்.
ஆனால், இது குறித்து ஊர் மக்கள் கூறுகையில், அந்த சிறுமியின் தந்தை தாக்கியதில் தான் அந்த குழந்தைக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.
இதனையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த கணேஷ் நகர் காவல் துறையினர், அந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு ஆட்டோவில் தப்பிச்செல்ல முயன்ற, காயம் அடைந்த கடலூர் மாவட்ட விருத்தாசலத்தைச் சேர்ந்த சத்தியநாராயணசாமி, அவரது மனைவி லில்லி புஷ்பா, மகன் விக்னேஸ்வர சாமி மற்றும் மகள் ஆதிலட்சுமி உள்ளிட்டோரையும் அழைத்துச்சென்று மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
இதில் சத்தியநாராயணசாமியின் மூன்றாவது மகள் கற்பகாம்பிகா இந்த சம்பவத்தில் படுகாயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கோயில்களில் திருடிய கும்பல் ஆட்டோவில் தப்பி வரும் காட்சிகளும் அவர்களை அந்த கிராமத்து இளைஞர்கள் விரட்டி வரும் காட்சிகளும் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
இதையும் படிங்க: Video Leak:'மினிமம் பேலன்ஸ் கூட இல்ல.. உனக்கு எதுக்கு ஏடிஎம் கார்டு'