புதுக்கோட்டை: கரூர் மாவட்டம் தொட்டியத்தில் நடைபெறும் மாநில அளவிலான கால்பந்து போட்டியில் கலந்துகொள்வதற்காக, புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை ஒன்றியம் பிலிப்பட்டி அரசு நடுநிலைப் பள்ளி மாணவிகள் 15 பேருடன் இடைநிலை ஆசிரியர் மற்றும் ஆசிரியை ஒருவர் என 17 பேர் கடந்த 14ஆம் தேதி சென்றுள்ளனர். இந்நிலையில் நேற்று (பிப்.15) காலை நடைபெற்ற முதலாவது சுற்றுப்போட்டியில் மாணவிகள் வெற்றிபெற்றுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து இரண்டாவது சுற்று இடைவெளி நேரத்தைப் பயன்படுத்திக் கொண்டு அருகில் உள்ள மாயனூர் கதவணைக்கு மாணவிகள் பார்வையிடச் சென்றுள்ளனர். பின்னர் பிலிப்பட்டி அரசு பள்ளி மாணவிகள் 13 பேர், இலுப்பூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகள் இரண்டு பேர் என மொத்தம் 15 பேர் குளிப்பதற்காகக் ஆற்றில் குதித்துள்ளனர்.
இதில் எட்டு மாணவிகள் ஒருபுறமாக நின்று குளித்துக் கொண்டிருந்தபோது ஏழு மாணவிகள் நீரின் வேகத்தில் இழுத்துச் செல்லப்பட்டனர். இதனை அடுத்து மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் கீர்த்தனா என்ற மாணவி நீருக்குள் சிக்கியிருந்த மூன்று பேரை மீட்டுள்ளார். மீதி நான்கு பேரை மீட்பதற்குள் நீர் அவர்களை அடித்துச் சென்றுள்ளது.
இதனைத் தொடர்ந்து தீயணைப்புத்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்குச் சென்ற தீயணைப்புத் துறையினர், நீரில் அடித்துச் செல்லப்பட்ட நான்கு பேரை சடலமாக மீட்டு, கரூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் மீதமுள்ள மாணவிகள் 11 பேரை, ஆர்டிஓ அலுவலகத்தில் வைத்து அவர்களின் பெற்றோர்களிடம் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு ஒப்படைத்தார்.
இது குறித்து தகவல் அறிந்த உயிரிழந்த மாணவிகளின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் பள்ளி முன் திரண்டு கண்ணீருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து பெற்றோர்கள் அனுமதி இன்றி உடற்கூராய்வு செய்ததைக் கண்டித்து மருத்துவமனை வளாகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: மனநலம் பாதித்த பெண்களுக்கு பாலியல் தொல்லை; தனியார் ஆசிரமத்தில் இருந்தவர்கள் மீட்பு