புதுக்கோட்டை: சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தலைமையில் அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன் ஆகியோர் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி செயல்பட்டுவரும் கரோனா சிறப்புப் பிரிவுகளை ஆய்வுசெய்தனர்.
இதன் பின்னர் ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர்களுடன் முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்துகொண்டு பல்வேறு ஆலோசனை, கருத்துக்களை முன்வைத்தார்.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், "மிக விரைவில் தொற்று இல்லாத மாநிலமாகத் தமிழ்நாடு உருவாகும். ஒரு வாரக் காலத்திற்குள் கரோனா தீவிரம் சரியத் தொடங்கும் என்று எதிர்பார்க்கிறோம். பொதுமக்களும் ஒத்துழைப்பு தந்து கொண்டுள்ளனர்.
மாநிலத்தில் இன்னும் 62 ஆயிரம் படுக்கைகள் காலியாக உள்ளது. மூன்றாவது அலை வந்தாலும் அதை எதிர்கொள்வதற்குத் தமிழ்நாடு தயாராக உள்ளது.
புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் மாநிலத்திலேயே இரண்டாவது பல் மருத்துவக் கல்லூரி கட்டுவதற்கு அனுமதி கேட்டு, மத்திய அரசிடம் விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்தவுடன் விரைவில் கட்டுமான பணிகள் தொடங்கும்.
புதிதாக நியமிக்கப்படவுள்ள 2000 மருத்துவர்கள், 3000 செவிலியர்கள், 1500 மருத்துவப் பணியாளர்கள் ஆகியோர் நேரடி நியமனங்கள் மூலமாகத் தான் பணி நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.
மாநிலம் முழுவதும் முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் கரோனாவிற்கு சிகிச்சை அளிப்பதற்காக 890 மருத்துவமனைகள் கண்டறியப்பட்டு உள்ளன.
முதலமைச்சர் காப்பீட்டுத் திட்டத்தில் சிகிச்சை அளிக்காது நோயாளியிடம் இருந்து பணம் வசூல்செய்த 40 தனியார் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கறுப்புப் பூஞ்சை நோய் உள்ளிட்ட நோய்களுக்கு மருந்து கையிருப்பில் உள்ளது. எந்த நோய் வந்தாலும் சமாளிப்பதற்கு அரசு தயாராக உள்ளது" என்று தெரிவித்தார்.