கரோனா தொற்று காரணமாக அனைத்து கல்வி நிலையங்களிலும் மாணவர்களுக்கான வகுப்புகள் ரத்து செய்யப்பட்டன. அந்த வகையில், புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரியிலும் வகுப்புகள் நிறுத்தப்பட்டிருந்தன.
தற்பொழுது ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு இருப்பதால் மருத்துவ மாணவர்களுக்கு இணையதளம் மூலமாக வகுப்பெடுக்கும் நிகழ்வினை இன்று மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் மீனாட்சி சுந்தரம் தொடங்கி வைத்தார். முதலாம் ஆண்டு பயிலும் 150 மாணவர்களில் 140 மாணவர்கள் இன்று இணையதளம் வாயிலாக மருத்துவக் கல்லூரியுடன் தொடர்பில் இருந்தனர்.
உடலியங்கியல் துறை பேராசிரியரும் துணை முதல்வருமான டாக்டர் சுஜாதா ஹார்மோன்கள் பற்றிய பாடங்களை பயிற்றுவித்தார். தொடர்ந்து உதவிப் பேராசிரியர்கள் டாக்டர் அன்பரசி, சாஜன் நிஷா, வெங்கடேஷ் ஆகியோர் பயிற்றுவித்தனர்.
140 மாணவர்கள் பங்கேற்ற காணொளி வாயிலாக நடத்தப்படும் இந்த வகுப்பில் மாணவர்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. இனிவரும் காலங்களிலும் இந்த இணையதள வகுப்புகள் தொடரும் என்றும், ஒரு நாளைக்கு ஒன்றரை மணி நேரம் வகுப்புகள் எடுக்கப்படும் என்றும் கல்லூரி முதல்வர் மீனாட்சி சுந்தரம் தெரிவித்தார்.