புதுக்கோட்டை நகராட்சிப் பகுதிகளில் பாலகத்தினை சட்டம், நீதிமன்றங்கள் சிறைச்சாலை, ஊழல் தடுப்புத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி பால்வளம், பால் மேம்பாட்டுத்துறை அமைச்சர் நாசர் ஆகியோர் நேற்று (ஜுன்.6) பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.
பின்னர், பால்வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் நாசர் கூறுகையில், 'இந்த கரோனா தொற்று காலத்திலும் ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியங்களாகச் சென்று விவசாயிகளிடமிருந்து ஆவின் மூலம் பால் கொள்முதல் செய்யப்பட்டு பால் பதப்படுத்தப்படுகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவின்படி, பொதுமக்களின் நலனுக்காக ஆவின் பால் ரூ.3 குறைக்கப்பட்டு, பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் விலை குறைக்கப்பட்ட பால் விற்பனை செய்யப்படுகிறதா என்பது குறித்து புதுக்கோட்டை திலகர் திடல் ஆவின் பாலகம், டி.வி.எஸ் மோட்டார் அருகில் உள்ள ஆவின் பாலகம் போன்றவற்றில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது. பால்வளத்துறையில் பணியாற்றும் பணியாளர்களும் முன்களப்பணியாளர்களாக அறிவிக்கப்பட்டு, அவர்களுக்கும் ஊக்கத் தொகை வழங்கப்பட்டு வருகிறது.
தினமும் 63,000 லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு, இதில் 21,500 லிட்டர் பால் தினமும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மீதமுள்ள பால் சென்னைக்கு அனுப்பப்பட்டு வருகிறது. ஆவின் நிறுவனத்தின் சார்பில் தற்பொழுது நெய், வெண்ணெய், பால்கோவா உள்ளிட்ட 152 வகையான பால் உபயோகப்பொருட்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டில், தினமும் 36 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு வந்தது. தற்போதைய அரசு மேற்கொண்ட துரித நடவடிக்கையின் காரணமாக 4 லட்சம் லிட்டர் பால் கூடுதலாக கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.
இதேபோன்று, 4 லட்சம் லிட்டர் பால் விற்பனையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆவின் பால் தரமானது. எனவே, பொதுமக்கள் அனைவரும் தரமான ஆவின் பாலை வாங்கிப் பயன்பெற வேண்டும். தனியார் நிறுவனங்களின் பாலில் கலப்படம் தொடர்பாக, ஏதேனும் புகார் வரப்பெற்றால் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
கிராமப்புறங்களில் பொதுமக்களுக்கு ஆவின் பால், பால் பொருட்கள் தேவையிருப்பின் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டால் நடமாடும் ஆவின் வாகனம் மூலம் நேரடியாக அவர்களது இல்லங்களுக்கே சென்று வழங்கப்படும். கால்நடைகளுக்குத் தேவையான தீவனங்களும் அரசு தீவன கிடங்குகள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது’ எனத் தெரிவித்தார்.
இந்நிகழ்வின் போது பால்வளத்துறை ஆணையர், ஆவின் மேலாண்மை இயக்குநர் நந்தகோபால் உடனிருந்தார்.
இதையும் படிங்க: ஊரடங்கில் லட்சக்கணக்கில் பணம் வைத்து சூதாட்டம்: நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை