தமிழே உயிரே வணக்கம், தாய்ப் பிள்ளை உறவும்மா உனக்கும் எனக்கும், வசந்தகால மலர்கள் தூவி வரவேற்போம்...! என்ற அழகான தமிழ் வரிகளை ஒன்றுபடுத்தி தமிழ் இசையுடனும் பரதநாட்டியத்துடனும் திமுக தலைவர் ஸ்டாலினை புதுக்கோட்டை எம்எல்ஏ பெரியண்ணன் அரசு இல்லத் திருமண விழாவிற்கு அக்கட்சியின் நிர்வாகிகள் வரவேற்றனர்.
இந்நிகழ்ச்சியில் பிரம்மாண்ட மேடை அமைப்பு அலங்காரங்களும் அமைக்கப்பட்டிருந்தது. திமுக தொண்டர்கள், உறவினர்கள் என ஆயிரக்கணக்கானோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். அனைவருக்கும் பொன்னாடை போர்த்தி மாலை அணிவித்து பரிசுகளை வழங்கி கௌரவித்த புதுக்கோட்டை மாவட்ட திமுக நிர்வாகிகள் தனக்குப் பின்னால் மேடையில் மிகப் பிரமாண்டமாக அமைக்கப்பட்டிருந்த விளம்பர பலகையிலிருந்த தமிழ் வார்த்தையில் உள்ள பிழையை சரிசெய்ய மறந்து விட்டனர்.
மேடையில் அமைக்கப்பட்டிருந்த விளம்பர பலகையில் கழகத் தலைவர் என்ற வார்த்தையில் 'த்' ஐ சேர்க்காமல் 'கழக தலைவர்' என்ற மிகப்பெரிய எழுத்தால் எழுதப்பட்டிருந்தது. திமுக தலைவர் ஸ்டாலின், புதுக்கோட்டை மாவட்ட இலக்கிய அணிச் செயலாளர் கவிதை பித்தன் மட்டுமின்றி ஏராளமான தமிழ் பேச்சாளர்களும் மேடையில் வந்திருந்தனர். ஆனால் ஒருவர் கூட அந்தப் பிழையை சுட்டிக் காட்டவே இல்லை. நடிகர் வடிவேலு சொல்வது போல "கோபத்துல குருக்க இருக்கக் கம்பிய மறந்துட்டனேடா!" என்பது போல பிழையை திருத்தாமல் தொண்டர்கள் விட்டுவிட்டனர்.
இதையும் படிங்க: கிராமப்புற மக்களின் வாழ்வாதரத்தை முன்னேற்றியவர் ஜெயலலிதா- எம்.ஆர் விஜயபாஸ்கர்.!