முக்குலத்தோர் புலிப்படையின் ஆலோசனைக் கூட்டம் புதுக்கோட்டையில் நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள வந்த முக்குலத்தோர் புலிப்படையின் தலைவரும் எம்எல்ஏவுமான கருணாஸ் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது பேசிய அவர்,'முக்குலத்தோர் புலிப்படை சார்பாக கடந்த தேர்தலில் எனக்கு சட்டப்பேரவை உறுப்பினராக வாய்ப்பு அளித்தவர், சசிகலா. அதனால், அவர் சிறையிலிருந்து வெளியே வந்தாலும் அவருக்கு எங்களின் ஆதரவு இருக்கும். அதே நேரத்தில் தமிழ்நாட்டில் தற்போது ஆட்சி செய்து வரும் எடப்பாடி பழனிசாமி பல்வேறு நலத் திட்டங்களை சிறப்பாக செய்து வருகிறார்.
குடிமராமத்துத் திட்டம், காவிரி, வைகை - குண்டாறு இணைப்புத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் அனைவரும் பாராட்டத்தக்க வகையில் உள்ளன.
பாஜக சார்பில் என்னையும் அழைத்துப் பேசினார்கள். அவர்களிடம் முக்குலத்தோர் சமூகத்திற்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை அளித்துள்ளோம். அந்த கோரிக்கைகளை யார் நிறைவேற்றினாலும் அவர்களுக்கு வரும் தேர்தலில் எங்கள் ஆதரவு உண்டு.
சமீபத்தில் நடந்த முத்துராமலிங்க குருபூஜையில் ஸ்டாலின் நடந்து கொண்ட விதம் குறித்து அவர்கள் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. கொள்கை அடிப்படையில் இந்தச் செயல் செய்தார் என ஸ்டாலின் கூறுவதற்கு, எவ்விதமான தார்மீக உரிமையும் இல்லை. ஸ்டாலின் செய்தது சரியா என்பதை அவர் தான் உணர்ந்து கொள்ள வேண்டும்.
சமூகத்தில் இந்து, இஸ்லாமியம், கிறிஸ்துவம் போன்ற மதங்கள் இருக்கும்போது திமுக தலைவர் ஸ்டாலின் தொடர்ந்து இந்து மதத்தை மட்டும் இழிவுப்படுத்தி வருவது சரியா என்பதை அவர் தான் முடிவு செய்ய வேண்டும். இந்து மதத்தை ஸ்டாலின் உதாசீனப்படுத்தி விட்டார்; அவமதித்து விட்டார் என்பதே எனது கருத்து. இதைத் தமிழ்நாட்டின் ஒவ்வொரு மக்களும் புரிந்து கொண்டுள்ளனர்.
பாஜக மதரீதியான பல யாத்திரைகளை நடத்தி அவர்களுடைய உள்அரசியலை ஒட்டு மொத்த இந்தியாவில் பலப்படுத்தி வருகின்றனர். தமிழ்நாட்டில் பாஜக வேல் யாத்திரை நடத்த உள்ளது. அதே நேரத்தில் அதே தேதியில் முக்குலத்தோர் புலிப்படையின் சார்பில் 'தேசிய தெய்வீக ரதயாத்திரை' நடத்தப்படும்.
நடிகர் ரஜினிகாந்த் ஒரு மாபெரும் மனிதர்; அவருக்கு அரசியல் தெரியாது. மனித நேயம் மிக்கவர். ஆனால், அரசியல் என்பது அவருக்கு அறியாத புரியாத ஒன்று. ஆகவே, அவர் ஓய்வு எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதே எனது கருத்து' என்றார்.
இதையும் படிங்க:’சசிகலாவிற்கு எந்த சூழலிலும் அரணாக இருப்பேன்': கருணாஸ் உறுதி