புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்ட காங்கிரஸ் சார்பில் பொங்கல் விழா புதுக்கோட்டையில் நடைபெற்றது. இதில் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் கலந்து கொண்டு பொங்கல் விழாவை தொடக்கி வைத்ததோடு, பொதுமக்களுக்கும், காங்கிரஸ் நிர்வாகிகளுக்கும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருச்சி நாடாளுமன்ற உறுப்பின திருநாவுக்கரசர், "போக்குவரத்து தொழிலாளர்கள் பிரச்னையை ஒரு முடிவுக்கு கொண்டு வர தமிழக அரசும் சரி, தொழிலாளர் தரப்பிலும் சரி, இருவரில் யாரேனும் ஒருவர் முன் வர வேண்டும். ஏனென்றால், இதனால் பாதிக்கப்படுவது பொதுமக்கள்தான்.
வேலை நிறுத்தத்தில் திமுக கூட்டணியில் உள்ள சிஐடியு உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்றுள்ளதால், கூட்டணிக்குள் எந்த விதமான குழப்பமும் வராது. தொழிலாளர்களின் பிரச்சினை என்பது வேறு, அரசியல் கூட்டணி என்பது வேறு. விஜயகாந்த் நல்ல மனிதர். அவரது மறைவு என்பது ஈடு செய்ய முடியாதது. அவர் மறைந்தபோது அவருக்கு பல லட்சம் பேர் அஞ்சலி செலுத்துவதற்காக கூடியது, அவருடைய நல்ல மதிப்பையும், உயர்வையும் காட்டுகிறது.
அதற்காக வாக்குகள் கிடைக்கும் என்பதற்காக, ஒரு சிலர் இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்துவதற்கு முயற்சி செய்யலாம். காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை, ஒரு புதிய கூட்டணியை காங்கிரசால் உருவாக்க முடியாது. அதற்கான கட்டமைப்பும் காங்கிரஸில் இல்லை" என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், "கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில்தான் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது. அன்று பல லட்சம் கோடி முதலீடு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால், அவை முதலீடாக தமிழகத்தில் செய்யப்பட்டுள்ளதா என்பது யாருக்கும் தெரியாது.
தற்போது திமுக, உலக முதலீட்டாளர் மாநாட்டை கடந்த சில வருடங்களுக்கு முன்பு நடத்தி, 6.5 லட்சம் கோடி முதலீடு வந்துள்ளதாக தெரிவித்துள்ளது. தமிழக முதல்வர் தொடர்ந்து இதனை கண்காணித்து, கடந்த ஆட்சிக் காலத்தில் இல்லாதது போன்று முதலீடுகள் தமிழகத்தில் செய்யப்படுகிறதா என்பதை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதிமுக, பாஜகவில் இருந்து பிரிந்து வந்ததால் சிறுபான்மையினர் வாக்கு கிடைக்கும் என்று எடப்பாடி நம்புகிறார். ஆனால், அவ்வாறு நடப்பதற்கு வாய்ப்பு இல்லை. ஏற்கனவே, திமுக கூட்டணி சிறுபான்மையினர் வாக்குகளை முழுவதுமாக பெற்று வருகின்றனர் என்று வெற்றியின் மூலமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. ஒரு சில சதவீத வாக்குகள் மட்டும் அதிமுக கூட்டணிக்கு வருவதற்கு உண்டான வாய்ப்புகள் உள்ளது. அது வெற்றியாக மாறுமா என்பது கேள்விக்குறிதான்" என்றார்.
தொடர்ந்து, "பிரதமர் மோடி அடிக்கடி தமிழகத்திற்கு வருவதால், பாஜகவிற்கு தமிழக மக்கள் வாக்களிப்பார்கள் என்று கருத முடியாது. தமிழகத்திற்கு ஏதாவது நல்லது நடக்க வேண்டும் என்பதற்காகத்தான் கோ பேக் மோடி என்று கூறிய திமுக, தற்போது பிரதமரை பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு அழைக்கின்றனர்.
மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், வெள்ள நிவாரணப் பணிகளை பார்வையிடுவதற்காக வந்தபோது, மக்களிடம் அனுசரிதனையாக நடந்து கொண்டு, இவ்வளவு நிதி நாங்கள் ஒதுக்குகிறோம் என்று கூறியிருக்க வேண்டும். அதற்கு மாறாக, நாங்கள் இவ்வளவு நிதி ஒதுக்கி உள்ளோம். கணக்கு கேட்பது என்பது தவறான செயல் என கூறினார்.
எம்ஜிஆர்-ஐ பற்றி பேசாத கட்சி என்பது கிடையாது. அதேபோன்று, விஜயகாந்த் பற்றி பேசாதவர்கள் யாரும் கிடையாது. விஜயகாந்த் போன்ற நல்ல மனிதர் யாரும் கிடையாது. இதனால் பிரதமர் மோடி அரசு நிகழ்ச்சிகளில் விஜயகாந்த் பற்றி கூறியது தவறு இல்லை. மேலும், இந்த தேர்தலில் தேமுதிகவிற்கு அனுதாப வாக்குகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது" என்றார்.
இதையும் படிங்க: அண்ணாமலை இதை செய்தால் அரசியலை விட்டு விலகுகிறேன்.. சவால் விட்ட எம்.பி.செந்தில்குமார்!