ஆடி மாதம் என்றாலே கோயில்களில் நடைபெறும் விரதங்கள், நேர்த்திக்கடன்கள், திருவிழாக்கள், அதனுடன் துணிக்கடை, நகைக்கடைகளில் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் ஆடி தள்ளுபடிதான்.
இப்படி ஆடி மாதம் முழுவதும் கொண்டாட்டத்தில் நிரம்பி இருக்கையில் புதுக்கோட்டை, தஞ்சாவூர் பகுதிகளில் மொய் விருந்து பல ஆண்டுகளாக களைகட்டிவருகிறது. நமக்குத் தெரிந்தவரை விசேஷ வைபவங்களில் மொய் என்பது ஒரு சாதாரணமான நிகழ்வாகத்தான் இருக்கும்.
ஆனால், இங்கு மொய் விருந்து என்றால் சாதாரணமாக இல்லை. மொய் எழுதுவதற்கே தனிப்பந்தல் அமைக்கப்பட்டும் என்றால், இதில் எவ்வளவு மொய் கிடைக்கும் என்று நம்மால் யோசிக்க முடிகிறதா? மொய் விருந்து நடத்த விரும்புபவர் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊர் முழுவதும் பேனர், நோட்டீஸ் பத்திரிகை மூலமாக அழைப்பு விடுப்பார். மேலும், விருந்திற்கு வருபவர்களுக்கு கறி விருந்து சமைத்து பரிமாறுவார்கள்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் 50 ஆண்டுகளாக நடைபெற்றுவந்த மொய் விருந்து, தற்போது புதுக்கோட்டை மாவட்டத்தில் பரவி தற்போது கிழக்கு கிராமங்களில் 35 ஆண்டுகளாக நடைபெற்றுவருகிறது.
இந்நிலையில், இந்தாண்டிற்கான ஆடி மாதம் தொடங்கிய நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் கொத்தமங்கலம், வடகாடு, கீரமங்கலம், புல்லான்விடுதி போன்ற கிராமங்களில் மட்டுமல்லாமல் இதனைச் சுற்றியுள்ள 25 கிராமங்களிலும் மொய் விருந்து வெகு சிறப்பாக நடைபெற்றுவருகிறது. கடந்தாண்டு புதுக்கோட்டை கிழக்கு கிராமங்களிலிருந்து வந்த மொய் ரூ.5 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், 'மொய் விருந்தை ஒரு கலாசாரமாக கருதி நடத்திவருகிறோம். பொருளாதாரத் தேவையை பூர்த்தி செய்து மணமணக்கும் கறி விருந்து போடுவது மகிழ்ச்சியாகவும் திருப்தியாகவும் இருக்கிறது. இந்த ஆண்டு கஜா புயலால் புதுக்கோட்டை கிழக்கு கிராமங்கள் அனைத்தும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.
இதனால் மொய் குறைவதற்கும் வாய்ப்புள்ளது. இருந்தாலும் ஊர்க்காரர்கள் குறையாமல் விருந்துக்கு வந்து செல்கிறார்கள். இந்த மொய்களில் இருக்கும் சுவையும் மனமும் வேறு எந்த ஒரு ஊர்களிலும் இருக்காது. பணத்திற்காக மட்டுமல்லாது அனைவரும் ஒருவேளை வயிறார உண்ண வேண்டும் என்பதையும் இதன் நோக்கமாக வைத்திருக்கிறோம்' என்று தெரிவித்தனர்.